5, 8-ம் வகுப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் ரத்து - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


5, 8-ம் வகுப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் ரத்து - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2020 10:30 PM GMT (Updated: 24 Jan 2020 12:35 AM GMT)

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடத்தூர், 

ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்ைடயன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போட்டி நடந்தது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் ரோட்டரி சங்க கவர்னர் கார்த்திகேயன், நிர்வாகி சண்முகசுந்தரம், ஆண்டமுத்து, மாநில அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்காலத்தில் பெண்களுக்கு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கோபியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக கிளையில் எரிபொருள் சேமிப்பு மற்றும் சாலை விதிகளை கடைபிடித்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 240 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வு சலுகை அளிப்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும். 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவானது 75 சதவீதம் இருக்க வேண்டும். எனவே தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவேட்டையும் அரசு கண்காணிக்கும். அரசு சார்பில் நீட் தேர்வு பயிற்சி தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்,’ என்றார்.

Next Story