தி.மு.க. வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு பேச்சு
தி.மு.க. வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பாக பேசினார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சத்தியமங்கலம் அருேக உள்ள செண்பகபுதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ் தலைமை தாங்கினார். செண்பகபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஓ.பி.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால் தி.மு.க. சில இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. சத்தியமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. எனினும் அவர்களால் எந்தவித திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.
தி.மு.க. வெற்றி பெற்று உள்ள ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும். அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், தி.மு.க. வெற்றி பெற்றாலும் அவர்களால் எந்த திட்டப்பணிகளையும் முழுமையாக செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது குறித்து வருத்தம் அடைய தேவையில்லை. வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம்,’ என்றார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி, முன்னாள் அரசு வக்கீல் என்.பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் எஸ்.சரவணகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அம்மு பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செண்பகபுதூர் ஊராட்சி கழக செயலாளர் என்.பி.ரகு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story