திமிரி அருகே, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் 51 பவுன் நகை திருட்டு - வேலைக்கார பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை


திமிரி அருகே, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் 51 பவுன் நகை திருட்டு - வேலைக்கார பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2020 4:00 AM IST (Updated: 24 Jan 2020 10:12 PM IST)
t-max-icont-min-icon

திமிரி அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் 51 பவுன் நகை திருட்டுப்போனது. இதுகுறித்து வீட்டு வேலைக்கார பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியை அடுத்த வளையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55) தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகளின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் தலைப்பொங்கலை கொண்டாட புதுமண தம்பதிகள் வளையாத்தூர் வந்துள்ளனர்.

அப்போது கடந்த 18-ந் தேதிஅன்று காலை சிவக்குமாரின் மகள் தான் அணிந்திருந்த 51 பவுன் நகைகளை கழற்றி ஒரு அறையில் வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தான் வைத்திருந்த இடத்தில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் நகை கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவக்குமார், திமிரி போலீசில் புகார் கொடுத்தார். அதில் நகை திருட்டு போன அன்று எங்கள் வீட்டில் வேலை பார்த்து வரும் சரசு மற்றும் அவரது உறவினரான ராபர்ட் ஆகியோர் வீட்டில் இருந்தனர். எனவே அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் கூறியிருந்தார்.

அதன்பேரில் திமிரி போலீசார், சரசு மற்றும் ராபர்ட் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் சிவக்குமார் வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது காணாமல்போன நகைகளில் ஒன்றான டாலர் செயின் வீட்டின் பின்புறம் கிடந்ததை கண்டெடுத்தனர்.

மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story