தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியில், ரூ.1½ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது


தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியில், ரூ.1½ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது
x
தினத்தந்தி 24 Jan 2020 10:45 PM GMT (Updated: 24 Jan 2020 4:55 PM GMT)

தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ 1½ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தேவாங்கபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவர் சிறுமுகையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வருங்கால வைப்புநிதி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தொழிலாளர்கள் சிலர் கடந்த ஆண்டு வேலையை விட்டு சென்றனர். அதை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து, வேலையை விட்டு சென்ற தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் வரை எடுத்து பிரகாஷ் மோசடி செய்து உள்ளார்.

இதை கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து அவர்கள், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, சிறுமுகையில் பதுங்கி இருந்த பிரகாசை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

பிரகாஷ் வேலை செய்து வந்த நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலையை விட்டு நிற்கும்போது, அவர்கள் தங்களின் வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விண்ணப்பம் கொடுப்பதுபோன்று பிரகாஷ் கொடுத்து உள்ளார். அந்த விண்ணப்பத்தில் அவர்களின் புகைப்படங்களை ஒட்டி, அவர்களின் கையெழுத்தை பிரகாசே போட்டு உள்ளார். மேலும் அவர்களின் வங்கி கணக்கு எண்ணை குறிப்பிடாமல் பிரகாசின் மனைவியின் வங்கி கணக்கை கொடுத்து உள்ளார்.

இதுபோன்று 5 பேரின் கணக்கில் இருந்து ரூ.1½ லட்சத்தை எடுத்து மோசடி செய்து உள்ளார். மீண்டும் அவர் 5 பேரின் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story