கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு: தேயிலை செடிகளில் கவாத்து பணி மும்முரம்


கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு: தேயிலை செடிகளில் கவாத்து பணி மும்முரம்
x
தினத்தந்தி 24 Jan 2020 10:00 PM GMT (Updated: 24 Jan 2020 5:48 PM GMT)

கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், தேயிலை செடிகளில் கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் விளங்கி வருகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் பனியின் தாக்கம் குறைவாக இருந்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், தேயிலை செடிகளில் கொப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு மழையின் தாக்கம் குறைந்து, பனியின் தாக்கம் அதிகரித்தது. குறிப்பாக கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதையொட்டி தேயிலை செடிகள் மட்டுமின்றி காய்கறி பயிர்களும் கருகி வருகின் றன. பனிப்பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் ஸ்பிரிங்லர் மூலமாக தண்ணீர் தெளித்தும், தாகை இலைகளை பரப்பியும் வருகின்றனர்.

இந்த நிலையில் தண்ணீர் வசதி உள்ள இடங்களில் தேயிலை செடிகளில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் தேயிலை செடிகள் தொடர்ந்து கருகி வருகின்றன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் தண்ணீர் வசதி இல்லாத தாழ்வான இடங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களை அமர்த்தி அல்லது விவசாயிகளே எந்திரம் மூலம் கவாத்து செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் கூறிய தாவது:-

ஒரு தேயிலை செடிக்கு கவாத்து செய்ய 1 ரூபாய் 20 பைசா முதல் 1 ரூபாய் 50 பைசா வரை செலவாகிறது. இதனால் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. எனினும் பனிப்பொழிவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேறு வழியின்றி தேயிலை செடிகளில் கவாத்து செய்து வருகிறோம். கவாத்து செய்த தோட்டங்களில் அடுத்த சில மாதங்களில் தரமான கொழுந்துகள் வளருவதுடன், மகசூலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story