தொழுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்


தொழுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Jan 2020 4:15 AM IST (Updated: 24 Jan 2020 11:21 PM IST)
t-max-icont-min-icon

தொழுநோய் குறித்து பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் வருகிற 30-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது;-

ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ந் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் வருகிற 30-ந் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட உள்ளது. மாநகராட்சி மூலம் வருகிற 30-ந் தேதி முதல் பிப்ரவரி 13-ந் தேதி வரை அனைத்து தொழுநோய் விழிப்புணர்வு பணிகளில் நகர்நல மைய பணியாளர்களை ஈடுபடுத்திட வேண்டும்.

மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 30-ந் தேதி அன்று நடைபெற உள்ள சிறப்பு கிராம சபையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மகளிர் திட்டம் மூலம் சுய உதவி குழுக்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், மாணவ-மாணவிகள் மூலம் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வட்டார மருத்துவ அலுவலர் ஒருங்கிணைப்பு தலைவராக இருந்து வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி தொழுநோய் விழிப்புணர்வு முகாம் பணிகளை வட்டார அளவில் செய்திட வேண்டும். பள்ளி கல்வித்துறை மூலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அனைவரும் 30-ந் தேதி அன்று காலையில் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும். பொதுமக்களிடையே தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, ஊராட்சிகள் துணை இயக்குனர் உமாசங்கர், சமூக பாதுகாப்பு நல அலுவலர் தனலட்சுமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ண லீலா, துணை இயக்குனர்கள் டாக்டர் யமுனா (தொழுநோய்), டாக்டர் சுந்தரலிங்கம் (காசநோய்), கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கமலவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story