திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
திருச்சி உறையூரில் பழிக்குப்பழியாக நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி உறையூர் மின்னப்பன்தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி உறையூரில் ஜிம் மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் புகழேந்தி வெளியே வந்தார். பின்னர் அவர் தினமும் உறையூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட சென்றபோது, உறையூர் பெரியசெட்டித்தெரு அருகே அவரை 8 பேர் கும்பல் வழிமறித்தனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய புகழேந்தியை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையாளிகள் விட்டு சென்ற அரிவாள், கத்தி மற்றும் தடயங்களை சேகரித்தனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஜிம் மணிகண்டனின் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தில் புகழேந்தியை படுகொலை செய்தது தெரியவந்தது.
மேலும், இந்த கொலையில் ஜிம் மணிகண்டனின் தம்பி சரண்ராஜ் (22) உள்பட சிலர் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ் வழக்குப்பதிவு செய்து, ஜிம் மணிகண்டனின் தம்பியும் கல்லூரி மாணவருமான சரண்ராஜ், காமாட்சி அம்மன்கோவில்தெருவை சேர்ந்த பிரபு (22), புதுபனிக்கன்தெருவை சேர்ந்த விஜயகுமார் (27), பாண்டமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன்(19) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சரண்ராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், தனது அண்ணன் ஜிம் மணிகண்டன் கொலைக்கு பழி தீர்க்கவே நண்பர்களுடன் சேர்ந்து புகழேந்தியை கொலை செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் மேலும், 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story