மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது - விவசாயிகள் வலியுறுத்தல் + "||" + Hydro-carbon project should not be allowed in Ariyalur district - Farmers insist

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது - விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது - விவசாயிகள் வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தாமரைக்குளம், 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கூறுகையில், தூத்தூர் குருவாடி மற்றும் டெல்டா பகுதியான திருமானூர் தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் நெல் அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அந்தந்த கிராமத்தில் விரைவில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் வாழ்கை இடையே உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டத்தை அரசு செயல் படுத்த வேண்டும். தூத்தூர் பெரிய ஏரியில் இருந்து பாசன கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும். தா.பழூர் ஒன்றியம் முத்துவாஞ்சேரி திருமானூர் ஒன்றியம் வைப்பூர் இடையில் உள்ள மருதையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குருவாடி கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் கூறுகையில், காவிரி டெல்டாவை பாதிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. மேலும் கிராமங்கள், பொது இடங்களில் இயற்கை சாண எரிவாயு நிலையம் அமைக்க வேண்டும். காய்கறி கழிவுகள், விவசாயக் கழிவுகள், மனித கழிவு மூலமும் மின்சாரம், இயற்கை எரிவாயு தயாரிக்கும் நிலையங்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரியலூர் மாவட்ட விவ சாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து கூறுகையில், கூட்டுறவு சங்கத்திற்கு நிகழாண்டு ரூ.47 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பதனை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநில தலைவர் அம்பேத்கர் வழியன் கூறுகையில், ஏலாக்குறிச்சி, திருமானூர், திருமழபாடி, அழகியமணவளம், வைப்பூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். சிமெண்டு ஆலைகள் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, அதனை நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அரியலூரில் மேலராமநல்லூருக்கு உடனடியாக புதிய வழித்தடத்தை அமைத்து, புதிய பஸ்களை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் கோரைக்குழியில் ஆதிதிரா விடர், அருந்ததியர் தெரு ஈடுகாடு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

ஆண்டிமடம் விவசாயி ஜெயச்சந்திரன் கூறுகையில், ஆண்டிமடம், ஆத்துக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். செங்கால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு நிர்வாகி பாலசிங்கம் கூறுகையில், பெரியாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, ஆலத்தியூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அரியலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் ஆழமாக தோண்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் ரத்னா கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.