மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேனை மோதி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி - 3 வாலிபர்கள் கைது
மாரண்டஅள்ளி அருகே மணல் கடத்தலை தடுத்த போது மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேனை மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கோவில்பட்டி சின்னாற்றில் இருந்து சரக்கு வேனில் ஒரு கும்பல் மணல் அள்ளி கடத்தி வந்தது. அப்போது மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி அந்த சரக்கு வேனை நிறுத்தினார். ஆனால் சரக்கு வேனில் வந்தவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மோட்டார் சைக்கிளில் சரக்கு வேனை பின் தொடர்ந்து வந்து நிறுத்தினார். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேனை மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதியை கொல்ல முயன்றனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சுதாரித்து எழுந்து அந்த வேனை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கிப்பிடித்து அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள் மாரண்டஅள்ளி அருகே உள்ள வெப்பாலம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (வயது21), சதீஸ் (22), கொலசனஅள்ளியை சேர்ந்த பூவரசன்(19) என்பதும், சின்னாற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் சரக்கு வேனுடன் ஒப்படைத்தார்.
மணல் கடத்தலை தடுத்த போது மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேனை மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மணலுடன் சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story