தடையை மீறி பா.ஜனதா கட்சியினர் ராமர் படத்துடன் ஊர்வலமாக செல்ல முயற்சி - போலீசாருடன் தள்ளுமுள்ளு
சேலத்தில் தடையை மீறி ராமர் சிலையுடன் ஊர்வலமாக செல்ல பா.ஜனதா கட்சியினர் முயன்றனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலத்தில் கடந்த 1971-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் தலைமையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது ஊர்வலத்தின் போது ராமர், சீதை புகைப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவுப்படுத்தியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இந்த செயலை கண்டித்து பாரதீய ஜனசங்கத்தினர் அப்போது போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, பெரியார் தலைமையில் 1971-ம் ஆண்டு நடந்த ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் அவமரியாதை செய்யப்பட்டதாக சமீபத்தில் நடந்த ‘துக்ளக்’ பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பெரியார் ஊர்வலத்தில் ராமர், சீதை அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் நடந்து முடிந்து தற்போது 50-வது ஆண்டை எட்டி உள்ளது. இதையொட்டி நேற்று சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் ராமர் படத்துடன் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு பா.ஜனதாவினர் திரண்டனர்.
பின்னர் அவர்கள் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் படத்துக்கு மாலை அணித்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். இந்த ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஏற்கனவே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து ஊர்வலத்துக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பா.ஜனதாவினரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். பின்னர் 50 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் லட்சுமணன் கலந்து கொண்டு பேசும்போது, “50 ஆண்டுக்கு முன்பு இதே நாளில் பெரியார் தலைமையில் ராமர் உள்ளிட்ட இந்து கடவுள்களை அவமரியாதை செய்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
அதனை துடைத்தெறியும் வகையில் ராமர் படத்துக்கு இன்று(நேற்று) மாலைகள் அணிவித்து ஊர்வலமாக எடுத்து செல்கிறோம்” என்றார்.
Related Tags :
Next Story