குறுகிய பாலத்தை விரிவுபடுத்தி தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலெக்டரிடம் புகார் மனு


குறுகிய பாலத்தை விரிவுபடுத்தி தரக்கோரி   ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலெக்டரிடம் புகார் மனு
x
தினத்தந்தி 25 Jan 2020 4:15 AM IST (Updated: 25 Jan 2020 12:33 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் கிருஷ்ணா கால்வாயின் மேல் செல்லும் குறுகிய பாலத்தை அகலப்படுத்தி தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்டோர் கலெக்டரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு தலைமையில் நேற்று ஊராட்சிமன்ற துணைத் தலைவர் சசிகலா கோபிசந்திரன், மாவட்ட கவுன்சிலர் இந்திரா பொன்குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் வேதவள்ளி சதீஷ்குமார் மற்றும் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஒரு புகார் மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அதில், திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஊராட்சியில் உள்ள மயான பாதைக்கு செல்லும் வழியில் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் மேல் செல்லும் பாலம் 4 அடி அகலம் கொண்டதாக உள்ளது.

இந்த பாலத்தின் வழியாகவே இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. குறுகிய பாலத்தில் சடலங்களை எடுத்து செல்லும் போது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

பாலத்தை அகலப்படுத்தவும்

கால்வாயில் தண்ணீர் நிறைந்து ஓடும் காலங்களில், அதில் பொதுமக்கள் தண்ணீரில் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் இந்த பாலத்தை செவ்வாப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த பழைய காலனி, புதிய காலனி, எப்.சி. காலனி, கே.ஜே.ஜே. நகர், செல்லியம்மன் நகர், செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் இறப்பு ஏற்படும் சமயங்களில் இறந்தவர்களின் சடலங்களை இந்த குறுகிய பாலத்தின் மேல்தான் சிரமத்துடன் கொண்டு செல்கின்றனர்.

இந்த பாலம் தற்போது மிகவும் சேதமடைந்து, உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த குறுகிய பாலத்தை விரிவுபடுத்தி அகலப்படுத்தி தர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story