குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்
குமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவில்,
குடியரசு தினவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. விழாவில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் பார்வையிடுகிறார்கள். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
குடியரசு தின விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8-ந் தேதி இரவு களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்பு அதிகம் போடப்பட்டுள்ளது.
பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்தியதில் தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நாசவேலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமான கன்னியாகுமரி உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் இருந்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ்நிலையம், மார்க்கெட் போன்ற பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்க கடலோர கிராமங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரெயில் நிலையத்தின் நுழைவு வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது உடமைகள் நவீன கருவிகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரெயில் தண்டவாளங்களில் போலீசார் ரோந்து சென்று பார்வையிட்டு வருகின்றனர். ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story