சீசன் துவங்கியது மாமல்லபுரத்தில் நண்டு பிடிப்பதில் மீனவர்கள் மும்முரம்


சீசன் துவங்கியது மாமல்லபுரத்தில் நண்டு பிடிப்பதில் மீனவர்கள் மும்முரம்
x
தினத்தந்தி 25 Jan 2020 3:45 AM IST (Updated: 25 Jan 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

கடல் நண்டுகள் இனப்பெருக்கம் செய்யும் சீசன் துவங்கி உள்ளதாலும், அவைகள் கடற்கரை பகுதியை நோக்கி வருகிற காலம் என்பதாலும் மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர்கள் நண்டு பிடிக்கும் பணியில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

மாமல்லபுரம்,

கடலில் வருடத்தில் சில மாதங்கள் வரையே நண்டுகள் அதிகளவில் இனப்பெருக்கமாகி கரைப்பகுதியை நோக்கி வரும். அப்போது அவை கடல் அலையில் அடித்து வரும்போது மீனவர்கள் வீசிய வலையில் அதிகளவில் சிக்குவதுண்டு. குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கடலில் அதிகளவில் நண்டுகள் குஞ்சு பொறித்து வளர்ந்து கரைப்பகுதிக்கு வரும்.

இந்த நிலையில், நண்டு சீசன் தற்போது துவங்கியதையொட்டி, மாமல்லபுரம் சுற்றுவட்டார கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் நண்டு பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லாமல் கரைப்பகுதியில் வலைவிரித்து நண்டுகள் பிடிப்பர்.

அதேபோல் இரவு நேரத்தில் கடல் ஓரத்தில் உள்ள மணலில் நண்டுகள் இரை தேடுவதற்கு அதிகளவில் நடமாடும். அவைகள் மீது டார்ச் லைட் அடித்து அதன் வெளிச்சத்தில் மீனவர்கள் நண்டு பிடித்து வருவார்கள். தற்போது சீசன் துவங்கி உள்ளதால் மாமல்லபுரம் கிழக்கு கடலோர மீனவ பகுதியில் பலர் நண்டு பிடிக்கும் பணியில் ஆர்வமாக இறங்கி உள்ளனர். கடல் நண்டுவில் உள்ள சதைப்பகுதி மருத்துவகுணம் நிறைந்தது என்பதால் அசைவ பிரியர்கள் பலர் கடல் பகுதிக்கு வந்து நண்டு வாங்கிச் செல்கின்றனர். நண்டுகளில் வெள்ளி, சீவாளி ஆகிய வகையை சேர்ந்த நண்டுகள் அதிக ருசி உடைய தாகும்.

Next Story