மங்களூரு விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைதான என்ஜினீயரிடம் போலீஸ் விசாரணை


மங்களூரு விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைதான என்ஜினீயரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2020 4:30 AM IST (Updated: 25 Jan 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைதான என்ஜினீயரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வெடிகுண்டு வைத்தது எப்படி என்பது பற்றி போலீசாரிடம் நடித்து காட்டினார்.

மங்களூரு,

மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் கடந்த 20-ந்தேதி காலை கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை சோதித்து பார்த்த போது, அதில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த வெடிகுண்டுகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, வெடித்து செயலிழக்க வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் ஆட்டோவில் வந்து வெடிகுண்டு வைத்து சென்றதாக உடுப்பி மாவட்டம் மணிப்பால் அருகே கே.எச்.பி. காலனியை சேர்ந்த என்ஜினீயரான ஆதித்யாராவ் (வயது 36) என்பவர் பெங்களூரு டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த 22-ந்தேதி சரண் அடைந்தார். அவரை மங்களூரு போலீசார் விமானம் மூலம் மங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர்.

மங்களூரு பனம்பூரில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது எம்.பி.ஏ., பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள ஆதித்யாராவ், தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததும் தெரியவந்தது. மேலும் ஏற்கனவே பெங்களூரு விமான நிலையத்தில் காவலாளி வேலை கிடைக்காத விரக்தியில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் மற்றும் சிட்டி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்ததும், இதுதொடர்பாக அவர் சிக்பள்ளாப்பூர் சிறையில் 9 மாதம் சிறை வாசம் அனுபவித்ததும் தெரியவந்தது.

அத்துடன் சி்றையில் இருந்த போதே மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதும், இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே மங்களூருவுக்கு வந்ததும், அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்த அவர் ஆன்-லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கி, வெடி குண்டு தயாரித்ததும் தெரியவந்தது. இந்த வெடி குண்டு தயாரிப்பதற்காக சென்னையில் இருந்து ஜெல்லட்டின், டெட்டனேட்டர்களை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மங்களூரு 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, 10 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை கைதான ஆதித்யாராவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் மங்களூரு விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரிடம் போலீசார் ஆட்டோவில் இருந்து இறங்கி வெடிகுண்டு இருந்த பையை எப்படி பாதுகாப்பை மீறி உள்ளே எடுத்து சென்றார் என்பது பற்றி விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டு இருந்த பையை டிக்கெட் கவுண்ட்டர் அருகே எங்கே வைத்தார்? என்பது பற்றி போலீசார் கேட்டனர். அதற்கு அவர் போலீசாரிடம் வெடிகுண்டு பையை வைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.

அத்துடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்க எப்படி வந்தேன் என்பது பற்றியும், பின்னர் அங்கிருந்து எப்படி வெளியே வந்தேன் என்பது பற்றியும் கைதான ஆதித்யாராவ் போலீசாரிடம் நடித்து காட்டினார்.

பின்னர் அவரை போலீசார், பனம்பூர் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் வெடிகுண்டு வைத்தது மற்றும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறார்கள்.

விரைவில் ஆதித்யாராவை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story