பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் குடியரசு தின விழா கவர்னர் நாளை தேசிய கொடி ஏற்றுகிறார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்


பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் குடியரசு தின விழா கவர்னர் நாளை தேசிய கொடி ஏற்றுகிறார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 25 Jan 2020 5:15 AM IST (Updated: 25 Jan 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி சார்பில் பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநகராட்சி சார்பில் மானேக்‌ஷா மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பள்ளி மாணவ-மாணவி களின் கலை நிகழ்ச்சிகள், போலீசார், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. தற்போது இதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. மேலும் மானேக்‌ஷா மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி சார்பில் குடியரசு தின விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு கப்பன் ரோட்டில் உள்ள பீல்டு மார்ஷல் மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிறது. சரியாக காலை 8.58 மணிக்கு கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை கவர்னர் பார்வையிடுகிறார்.

பின்னர் மேடைக்கு வந்து குடியரசு தின உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து போலீஸ் படைகள் உள்பட படைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்குபெறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் சாசக நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல் முறையாக கோவா போலீஸ் குழுவும் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன.

இந்த விழாவை பார்வையிட வரும் மக்கள் சிகரெட், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், துண்டு பிரசுரங்கள், கத்தி போன்ற ஆயுதங்கள், கருப்பு துணிகள், கேமரா, செல்ேபான், ஹெல்மெட், குடிநீர் பாட்டில், மதுபான பாட்டில், உணவு பண்டங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி பெங்களூருவில் 44 போலீஸ் குழுக்கள், 1,750 மாணவர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்கள். விழாவை காண பொதுமக்களின் வசதிக்காக 10 ஆயிரம் இருக்ககைகள் போடப்பட்டு உள்ளன. கவர்னர் கொடி ஏற்றும்போது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக அணிவகுப்பில் தூய்மை பாரதம் திட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களின் குழுவும் இடம் பெறுகிறது. இவ்வாறு அனில்குமார் கூறினார்.

அதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறியதாவது:-
குடியரசு தின விழாவையொட்டி மானேக்‌ஷா மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 9 துணை போலீஸ் கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 150 அதிகாரிகள், 943 சாதாரண போலீசார், பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். 10 கர்நாடக ஆயுதப்படை போலீஸ் குழு, கருடா படை, கமாண்டு கட்டுப்பாட்டு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் 7 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மைதானத்தை சுற்றிலும் 85 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மைதானம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக அந்த மைதானத்திற்கு 75 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பெங்களூருவில் புதிதாக வந்து தங்குபவர்கள், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருப்பவர்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். அந்த மைதானத்தை சுற்றியுள்ள அடுக்குமாடி கட்டிடங்களையும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறினார்.

Next Story