ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாளர்கள், போலீஸ்காரர் மீது தாக்குதல் - தம்பி கைது - அண்ணனுக்கு வலைவீச்சு


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாளர்கள், போலீஸ்காரர் மீது தாக்குதல் - தம்பி கைது - அண்ணனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jan 2020 3:30 AM IST (Updated: 25 Jan 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையை பார்க்க வந்த அண்ணன்-தம்பி இருவரும் மருத்துவமனை பணியாளர்களிடம் தகராறு செய்து தாக்கியதோடு, பிடிக்க வந்த போலீஸ்காரரையும் தாக்கி படுகாயபடுத்தினர். இதுதொடர்பாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58). இவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தாராம். இந்த நிலையில் சண்முகத்தின் மகன்கள் துரை மற்றும் அவரது தம்பி சேதுபதி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் தந்தையை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர். அப்போது ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த செவிலியர் கல்பனா என்பவர் இரவு நேரம் என்பதால் பார்வையாளர் அனுமதி நேரம் முடிந்து விட்டது. இருப்பினும் ஒவ்வொருவராக சென்று பார்த்துவிட்டு திரும்பி வருமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணன்-தம்பி இருவரும் செவிலியரிடம் தகராறு செய்து அவரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதனைக்கண்ட ஆஸ்பத்திரி பாதுகாவலர்கள் முத்துவயல் அழகையா மகன் திரிசங்கு(50), முதுகுளத்தூர் காமராஜர் தெரு குப்பாண்டி மகன் முரளிகுமார்(28), பனையடியேந்தல் சின்னத்தம்பி மகன் முருகன்(36) ஆகியோர் சென்று இருவரையும் கண்டித்துள்ளனர். அப்போது அவர்களையும் சரமாரியாக தாக்கி மிரட்டியுள்ளனர். இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி அறிந்த புறக்காவல் நிலைய போலீஸ்காரர் சந்திரசேகர் அங்கு சென்று அண்ணன்-தம்பி இருவரையும் ஆஸ்பத்திரியில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து சந்திரசேகரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதனை தொடர்ந்து காயமடைந்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அண்ணன்-தம்பி இருவரும் ஆஸ்பத்திரிக்குள் இரவு நேரத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடியதை கண்டித்தும், உடனடியாக அவர்களை கைது செய்யக்கோரியும் ஆஸ்பத்திரி வளாகத்தில் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகர் போலீசார் விரைந்து வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் பணிக்கு திரும்பினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரி பணியாளர் திரிசங்கு மற்றும் தலைமை காவலர் சந்திரசேகர் ஆகியோர் தனித்தனியாக ராமநாதபுரம் நகர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து தம்பி சேதுபதி(35) என்பவரை கைது செய்தார். மேலும் அவர்கள் ஆஸ்பத்திரியில் நிறுத்தியிருந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள துரையை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story