ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கையில் கயிறு கட்டி, மண்டியிட்டு விவசாயிகள் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கையில் கயிறு கட்டி, மண்டியிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2020 4:30 AM IST (Updated: 25 Jan 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைகேட்பு கூட்டம் நடந்த போது விவசாயிகள் கையில் கயிறு கட்டிக்கொண்டு, மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது விவசாயிகள் சிலர் கையில் கயிறு கட்டிக்கொண்டு, கலெக்டர் முன்பு மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌‌ஷமிட்டனர். பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் குறித்த விவரம் வருமாறு:-

கடலூர் மாதவன்: விளை நிலங்களை பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை கைவிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் அறிவித்தும், இதுவரை பல இடங்களில் செயல்படாமல் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும். நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் நெல்லுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என்றார்.

மங்களூர் சுப்பிரமணியன்: சிறுபாக்கம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் கிடக்கிறது. அதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நல்லூர் ஜெகதீசன்: தங்கள் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையால், இதுவரை அறுவடை செய்யப்படவில்லை. இதனால் நெற்கதிர்கள் உதிரும் நிலை உள்ளது. எனவே நெல் அறுவடை எந்திரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ரவீந்திரன்: நோய் தாக்குதலால் சம்பா பயிர்களில் மகசூல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகளையே விற்பனை செய்ய வேண்டும் என்றார்.

குமராட்சி பாலு: கீரப்பாளையம் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் பல நாட்களாகியும், அறுவடை எந்திரங்கள் கிடைக்கவில்லை. இதனால் நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது. இதேபோல் உளுந்து பயிர்களும் அறுவடை செய்ய முடியாமல், பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அறுவடை எந்திரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து கலெக்டர் அன்புசெல்வன், அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மாரியப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரேணுகாம்பாள், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செழியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story