திருட்டு நகைகளை வாங்காமல் அடகு கடை உரிமையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


திருட்டு நகைகளை வாங்காமல் அடகு கடை உரிமையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Jan 2020 4:00 AM IST (Updated: 26 Jan 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு நகைகளை வாங்காமல் அடகு கடை உரிமையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி காவல் துறை சார்பில் நகை அடகு கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் பேசியதாவது:-

கிருஷ்ணகிரியில் திருட்டு மற்றும் கொள்ளைகளை தடுக்கவும், திருடர்கள் பயமின்றி மக்கள் வாழவும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருடன் அடகு கடை உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக, இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகை திருட்டில் ஈடுபடுவோர் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர், அடகு கடையில் எளிதாக பணம் பெறுவதால், குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

தெரியாமல் திருட்டு நகையை பெற்றாலும், சட்டம் தெரியாது என்பதற்காகவும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே திருட்டு நகைகளை வாங்காமல் உஷாராக இருக்க வேண்டும். அடகு கடை உரிமையாளர்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். பதிவேடுகளை முறையாக பராமரிப்பதோடு, வரும் வாடிக்கையாளர்களின் செல்போன் போன் எண்களையும் பெற வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அடமானம் பெற கூடாது.

பெரும்பாலான கடைகள் பாதுகாப்பு வசதி இல்லாமல் உள்ளன. கண்டிப்பாக, கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். சந்தேகத்திற்கு உரிய நபர்கள் குறித்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர் (கிருஷ்ணகிரி டவுன்), சுரேஷ்குமார் (தாலுகா), கணேஷ்குமார் (மகராஜகடை), சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி, சிவசந்திரன் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள், வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story