மண்ணச்சநல்லூர், துவாக்குடி, முசிறியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மண்ணச்சநல்லூர், துவாக்குடி, முசிறியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகள், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்தும் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
ஊர்வலம் மண்ணச்சநல்லூர் கடைவீதி, திருப்பைஞ்சீலி ரோடு, துறையூர் ரோடு வழியாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் பலர் கலந்துகொண்ட னர். தொடர்ந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
துவாக்குடி, முசிறி
சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி துவாக்குடி போக்குவரத்து காவல்துறை மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். துவாக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முசிறி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு சாலைவிதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்ட அரசு பஸ் வந்திருந்தது. அதில் சாலைவிதிகள் குறித்து வீடியோ மூலம் காட்சி நடந்தது. இதனைபொதுமக்கள் பார்வையிட்டனர். இதேபோன்று முசிறி கைகாட்டியில் மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
Related Tags :
Next Story