களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்றது எப்படி? - பயங்கரவாதிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர்


களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்றது எப்படி? - பயங்கரவாதிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர்
x
தினத்தந்தி 26 Jan 2020 5:00 AM IST (Updated: 26 Jan 2020 12:46 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்றது எப்படி? என்று பயங்கரவாதிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில், 

குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக திருவிதாங்கோடு அடப்புவிளை பதார் தெருவை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 29), நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார்நகர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 2 பேரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது பயங்கரவாதிகள் 2 பேரையும் 10 நாட்கள் வரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வரை முடிந்துள்ள விசாரணையின் மூலமாக வில்சனை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கொலைக்கான ஆயுதங்கள் சிக்கியதை தொடர்ந்து பயங்கரவாதிகள் 2 பேரும் சேர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டு கொன்றது எப்படி? என்பதை நடித்துக்காட்ட வைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கொலை நடைபெற்ற இடத்துக்கு அப்துல் சமீமையும், தவுபிக்கையும் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினர் அழைத்து சென்றார்கள். பின்னர் 2 பேரும் சேர்ந்து வில்சனை சுட்டு கொன்றது எப்படி? என்பதை போலீசார் முன் தத்ரூபமாக நடித்து காட்டினர். அப்போது உளவுப்பிரிவு போலீசாரும் உடன் இருந்தனர்.

அதாவது கொலை அரங்கேறுவதற்கு முன்னதாக 2 பேரும் நெய்யாற்றின்கரையில் இருந்து ஆட்டோ மூலமாக களியக்காவிளை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன் வந்து இறங்கி இருக்கிறார்கள்.

எனவே அதே ஓட்டல் முன் 2 பேரையும் போலீசார் நிறுத்தி நடித்துக்காட்ட சொன்னார்கள். அப்போது பயங்கரவாதிகள் 2 பேரும் சேர்ந்து நடித்து காட்டிய விவரம் வருமாறு:-

முதலில் 2 பேரும் ஓட்டல் முன் இருந்து பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக நடந்து சென்று சந்தைரோட்டை அடைந்தனர். அப்போது இரவு நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டதாக 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் சந்தைரோட்டில் உள்ள ஒரு பேன்சி கடை சந்திப்பில் மறைவாக நின்று கொண்டு சோதனை சாவடியை 2 பேரும் நோட்டமிட்டனர். சோதனை சாவடியில் எத்தனை போலீசார் இருக்கிறார்கள்? என்று சரியாக தெரியவில்லை. இதனால் 2 பேரும் சோதனை சாவடி முன் சகஜமாக நடந்து சென்றபடியே அங்கு எத்தனை போலீசார் இருக்கிறார்கள்? என்பதை கண்காணித்தனர்.

அப்போது சோதனை சாவடியில் ஒரு போலீஸ் (சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்) மட்டும் இருந்ததை அவர்கள் உறுதி செய்து கொண்டனர். ஆனால் நடிப்பின் போது வில்சன் அமர்ந்திருந்த இடத்தில் வேறு ஒரு போலீஸ்காரர் அமர வைக்கப்பட்டு இருந்தார். அதன்பிறகு அவர்கள் தப்பிச் செல்வதற்காக திட்டமிட்டு வைத்த பாதையை சென்று பார்வையிட்டனர். அதாவது சந்தைரோட்டில் உள்ள பள்ளிவாசலின் பின்புற வாயிலுக்கு சென்று பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து வில்சன் இருந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரரை நோட்டமிட்டபடியே 2 பேரும் மீண்டும் பேன்சி கடை சந்திப்புக்கு வந்தனர். அங்கு நின்று கொண்டு தங்களது ஆயுதங்களை சரிபார்த்ததோடு தாக்குதலுக்கும் தயாராகினர். பின்னர் 2 பேரும் வேகமாக வந்து அந்த போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். முதலில் அப்துல் சமீம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை சரமாரியாக வெட்டுவது போல நடித்தார். அதன்பிறகு தவுபிக் தன் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீஸ்காரரை சுட்டார். தங்களது திட்டம் நிறைவேறியதும் 2 பேரும் பள்ளிவாசலின் பின்புறம் வழியாக தப்பி ஓடி முன்புற நுழைவு வாயில் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விட்டனர்.

இதனையடுத்து 2 பேரும் ஆயுதங்களை மறைத்து வைத்துக்கொண்டு அங்கிருந்து மீண்டும் நெய்யாற்றின்கரை நோக்கி ஒன்றும் அறியாதவர்கள் போல நடையை கட்டினர்.

இவ்வாறு 2 பேரும் நடித்துக் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் 2 பேரும் நடிப்பதற்கு ஆயுதங்களை போலீசார் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக சைகை மூலமாக 2 பேரும் நடித்து காட்டினார்கள். அதோடு எப்படி வெட்டினேன்? என்பதை அப்துல் சமீமும், எவ்வாறு துப்பாக்கியால் சுட்டேன்? என்பதை தவுபிக்கும் போலீசாரிடம் தெரிவித்தபடி நடித்து காட்டினார்கள்.

இவ்வாறு பயங்கரவாதிகள் 2 பேரும் நடித்துக்காட்டியதை போலீசார் வீடியோ பதிவு செய்துகொண்டார்கள். இதற்கிடையே வில்சனை பயங்கரவாதிகள் சுட்டபோது துப்பாக்கி தோட்டாவில் இருந்து கழன்று விழுந்த மூடியை சோதனை சாவடி அருகே போலீசார் தேடினர். பயங்கரவாதிகள் வில்சனை சுட்டபோது ஒரு தோட்டா அங்குள்ள பிளாஸ்டிக் நாற்காலி மீது பாய்ந்துள்ளது. இதனால் அந்த நாற்காலியில் ஓட்டை காணப்பட்டது. அந்த நாற்காலியை போலீசார் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை மீண்டும் நாகர்கோவிலில் உள்ள நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

முன்னதாக வில்சன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு பயங்கரவாதிகள் அழைத்து வரப்பட்ட தகவல் அப்பகுதியில் காட்டுத்தீபோல பரவியது. இதனால் அங்கு ஏராளமான மக்கள் கூடிவிட்டார்கள்.

எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் தடுக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.

கேரள போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் நடித்து காட்டிய சமயத்தில் சந்தைரோட்டில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

Next Story