விண்வெளி நிகழ்வுகளை செயற்கைகோள் மூலம் படம் பிடிப்பதில் இந்தியா சிறந்து விளங்குகிறது - இஸ்ரோ மைய இயக்குனர் அழகுவேல் பேச்சு
விண்வெளி நிகழ்வுகளை செயற்கைகோள் மூலம் உடனுக்குடன் படம் பிடித்து அனுப்புவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று இஸ்ரோ மைய இயக்குனர் அழகுவேல் கூறினார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடந்த அறிவியல் புத்தாக்க நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அறிவியல் மைய அலுவலர் குமார் வரவேற்று பேசினார். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மைய இயக்குனர் அழகுவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தாக்க பயிற்சி முகாமையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் படிக்கின்ற காலத்தில் இதுபோன்ற புத்தாக்க பயிற்சி முகாம் மற்றும் விழிப்புணர்வு, அறிவியல் கண்டுபிடிப்புகள், கண்காட்சிகள் எல்லாம் கிடையாது. தற்போது உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்து உள்ளன. இதை அவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் விருப்பம் எதுவோ அதை படிக்க ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் விரும்புவதை, புரிந்து படிக்க வேண்டும். அப்போது தான் உங்களால் சாதிக்க முடியும்.
உலகில் விண்வெளி நிகழ்வுகளை செயற்கைகோள்கள் மூலம் உடனுக்குடன் படம் பிடித்து அனுப்புவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இயற்கை வளம், வெள்ளம், காடுகள், இயற்கை இடர்பாடு ஆகியவை தொடர்பாக செயற்கைகோள்கள் படம் எடுத்து அனுப்புகின்றன.
விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவி செவ்வாய், சந்திரனை பற்றி நாம் ஆய்வு செய்கிறோம். அங்குள்ள கனிம வளங்கள், அவற்றின் பயன்பாடுகள், மனிதனுக்கு அது எப்படி பயன்படும் என்பதை பற்றி ஆராய்கிறோம். நமது வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story