தேசிய வாக்காளர் தினம்: தலைமுறைகள் கடந்து ஒருவிரல் புரட்சி செய்து வரும் 106 வயது முதியவர் - வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய சப்-கலெக்டர்


தேசிய வாக்காளர் தினம்: தலைமுறைகள் கடந்து ஒருவிரல் புரட்சி செய்து வரும் 106 வயது முதியவர் - வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய சப்-கலெக்டர்
x
தினத்தந்தி 26 Jan 2020 4:00 AM IST (Updated: 26 Jan 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

தலைமுறைகள் கடந்து ஒருவிரல் புரட்சியை செய்து வரும் 106 வயது முதியவரை, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று சப்-கலெக்டர் பிரவீன்குமார் வாழ்த்து தெரிவித்து கவுரவித்தார்.

திட்டக்குடி,

ஒவ்வொரு தேர்தலின் போதும், நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளம் தலைமுறையினரை முழுமையாக தேர்தலில் பங்கெடுக்க செய்யும் விதமாக அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இன்றைய ஆண்ட்ராய்டு காலத்தில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர தேர்தல் ஆணையம் எத்தனையோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த இளம் வாக்காளர்கள், ஒரு விரல் புரட்சி என்று கூறி தங்களது வாக்கை பதிவு செய்தவுடன், செல்போனில் புகைப்படங்களை எடுத்து, அதை தங்களது சமூக வலைதள பக்கம் மற்றும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசாக வைத்து வருவதை பார்த்து இருப்போம். ஆனால், அந்த காலத்தில் இருந்தே எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல், பல தலைமுறைகளை கடந்து தனது ஜனநாயக கடமையை ஒருவர் செவ்வனே செய்து ஒரு விரல் புரட்சியை புரிந்து வருகிறார். அவருக்கு வயது 106.

ஆம், கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். 106 வயதுடைய இவருக்கு 3 மகள்கள், 6 பேர குழந்தைகள் மற்றும் 15 கொள்ளு பேர குழந்தைகள் உள்ளனர். இவர் உள்ளாட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தனது வாக்கை பதிவு செய்ய தவறியதில்லை.

நமது வாக்கு நமது எதிர்காலம் என்று இளம் தலைமுறையினருக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கும் சின்னபையனை, பெருமூளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தேசிய வாக்காளர் தினமான நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், நேரடியாக சென்று அவரை கவுரவித்தார். அப்போது ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து, சப்-கலெக்டர் பிரவீன்குமார் தலைமுறைகள் கண்ட சின்னபையனிடம் வழங்கினார்.

சின்னப்பையன் நிருபர்களிடம் கூறுகையில், “வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும், ஆகையால் தான் ஒவ்வொரு தேர்தலின் போதும் முதலில் எனது வாக்கை செலுத்தி விட்டு தான் அடுத்த வேலையை பார்க்க செல்வேன். அந்த அளவுக்கு உறுதியாக இருந்தேன். காமராஜர், கக்கன் காலம் தொடங்கி இன்று வரைக்கும் வாக்களித்து விட்டேன். ஆனால் அந்த காலத்தில் வாக்களிக்கும் போது வேட்பாளர்கள் எப்படி பட்டவர், அவரது நோக்கங்கள் என்ன என்பது குறித்து அறிந்து தான் வாக்களிப்போம். ஆனால் தற்போது கவர்ச்சி திட்டங்கள், ஓட்டுக்கு பணம் என்று மாறி, மக்களை ஏமாற்றும் ஒரு செயலாக மாறிவிட்டது” என்றார்.

Next Story