விழுப்புரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரணி - ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்
விழுப்புரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், இதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை முற்றிலும் திரும்ப பெறக்கோரியும் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இப்ராஹீம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முகம்மது இல்யாஸ், பஷீர், அப்துல்லத்தீப், அப்துல்ஹை, இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் தவ்பீக் கண்டன உரையாற்றினார்.
இதில் விழுப்புரம் நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இருந்து அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் இவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தேசிய கொடியை ஏந்தி கோஷம் எழுப்பியபடி விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்டன பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி பூந்தோட்டம் பாதை, ரங்கநாதன் சாலை வழியாக சென்று திருச்சி நெடுஞ்சாலையை அடைந்து அங்கிருந்து கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முடிவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள், பாரபட்சமா, பாரபட்சமா, மதத்தின் பெயரில் பாரபட்சமா? அஞ்சமாட்டோம், அஞ்ச மாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
Related Tags :
Next Story