குறைந்த விலைக்கு தங்கக்கட்டிகள் தருவதாக கூறி நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.40 லட்சம் மோசடி 5 பேரிடம் போலீசார் விசாரணை
குறைந்த விலைக்கு தங்கக்கட்டிகள் தருவதாக கூறி நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.40 லட்சம் மோசடி நடந்துள்ளது.
சென்னை,
சென்னை அமைந்தகரை வடக்கு ஹஸ்ரத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 54). செனாய் நகரில் நகைக்கடை வைத்துள்ளார். இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவி (49) மூலம் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தன்னிடம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கக்கட்டிகள் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு தருவதாகவும் பிரவீன்குமாரிடம் தெரிவித்தார். இதையடுத்து தங்கக்கட்டிகளை பரிசோதித்த பிரவீன்குமார் ரூ.40 லட்சத்தை முகமதுவிடம் கொடுத்தார். ஆனால் முகமது, அந்த தங்கக்கட்டிகளை பிரவீன்குமாரிடம் கொடுக்காமல் ரூ.40 லட்சத்துடன் நைசாக தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பிரவீன்குமார் புகார் அளித்தார். விசாரணையில் ரவிக்கு அமைந்தகரை பாரதிபுரத்தை சேர்ந்த பிரபாகரன்(50), கொடுங்கையூர் காந்தி நகரை சேர்ந்த அகமது செரிப் (47), மேற்கு மாம்பலம் உமாமதி தெருவை சேர்ந்த கணேசன்(57), கோடம்பாக்கம் ஈ.பி.காலனியை சேர்ந்த ராஜா(32) ஆகியோர் மூலமாக தான் முகமது பழக்கம் என்று தெரியவந்தது.
இதையடுத்து ரவி உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அகமது செரிப்புடன் முகமது நெருக்கமாக இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story