குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கள்ளக்குறிச்சியில் முஸ்லிம்கள் பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கள்ளக்குறிச்சியில் முஸ்லிம்கள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கள்ளக்குறிச்சியில் பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சாலிக்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அபுதாகீர், பொருளாளர் அப்துல்கை, துணை தலைவர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு சென்றனர். பேரணியானது கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முடிவடைந்தது.
இதையடுத்து அங்கு தவ்ஹீத் ஜமா அத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் கலெக்டர் கிரண்குராலாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பேரணியில் துணை செயலாளர்கள் மாலிக், அமானுல்லாஹ், பரகதுல்லாஹ் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் தவ்ஹீத் ஜமா அத்தினர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறி தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் உள்பட 1400 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story