மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியை கலெக்டர் அன்பழகன் ஏற்றினார்


மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியை கலெக்டர் அன்பழகன் ஏற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2020 3:45 AM IST (Updated: 26 Jan 2020 7:54 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசியகொடியை கலெக்டர் அன்பழகன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது.

கரூர், 

கரூர் தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று காலை இந்திய நாட்டின் 71-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து போலீசார் மற்றும் நாட்டுநலபணிதிட்டம், சாரணர் சாரணியர் படை, தேசிய மாணவர் படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகளின் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜூப்பில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அனைவரிடமும் தேசப்பற்றும், சமாதானமும், நிலவவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மேலும் தேசிய கொடியின் நிறங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதைத்தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய கரூர் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 61 பேருக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார். மேலும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 40 போலீசாருக்கு தமிழக முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்களையும், சிறப்பாக பணிபுரிந்த அரசு துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையை சேர்ந்த காவலர்களுளை பாராட்டி, பதக்கங்களையும் சான்றிதழையும் கலெக்டர் வழங்கினார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ஒரு பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும், வருவாய் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான இவசவ வீட்டுமனைகளையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ 4,375 மதிப்பில் விலையில்லா தையல் எந்திரத்தையும், 2 பயனாளிகளுக்கு ரூ.19,220 மதிப்பில் தையல் எந்திரத்தையும், வேளாண்மைதுறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ 36,266 மதிப்பிலான மழைத்தூவான மற்றும் தென்னைங்கன்றுகளையும், தோட்டக்கலை துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 933 மதிப்பிலான இடு பொருட்களையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் சமுதாய முதலீட்டு நிதியினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் நேரடி கடன் உதவி என மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் அரசு நலதிட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

அதன் பின்னர் கரூர் மாவட்ட பள்ளி, மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் விளையாட்டரங்க வளாகத்தில் நடந்தது. அப்போது நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம், மேலோங்கி பாலியல் குற்றங்களை தடுத்தல், மதுகுடிப்பதன் தீங்கு உள்ளிட்டவற்றை விளக்கும் விழிப்புணர்வு நடனம், பாரம்பரிய பறை ஆட்டம் ,வேற்றுமையில் ஒற்றுமை, கொண்ட இந்தியா என்கிற தலைப்பில் தேசிய ஒறுமைபாட்டை விளக்கும் நடனம் மற்றும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை,என ஐவகை நிலங்களில் வசிக்கும் தமிழக மக்களின் வாழ்வியல் முறைகள், தை பொங்கல்விழா சாகச நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் காண்போரை கவரும் விதமாக நடந்தது. அதிலும் பிளாஸ்டிக் நெகிழியை தவிர்த்து பூமி பந்தில் விதைப்பந்துகளை தூவுங்கள் என்பதை வலியுறுத்தி பாரத மாதாவிற்கு துணிபை, பாக்குமரதட்டு போன்றவற்றை அணிவித்து மாணவ, மாணவிகள் அரங்கேற்றிய நடன நிகழ்ச்சிகள் விழிப்பணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

இதில் அரசு இசைப்பள்ளி சரஸ்வதி வித்யாமந்திர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி,காந்திகிராமம் விஜயலெட்சுமி வித்யாலயா பன்னாட்டு பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தாந்தோணிமலை, அன்பாலயம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்பள்ளி, வாங்கல்வெற்றி விநாயகா மேல் நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பசுபதிபாளையம் சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றது குறிப்பிடதக்கது. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளையும் மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வேளாண்மை இணை இயக்குனர் வளர்மதி, முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கரூர் தாந்தோணிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்து பேசினார். முன்னதாக நீதிமன்ற ஊழியர்களுக்கு இடையே கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாந்தோணி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசேகர் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் சுமதி செய்திருந்தார். கரூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் சுதா, கரூர் ரெயில் நிலையத்தில் நிலைய மேலாளர் ராஜராஜன் கரூர் மேட்டுத்தெருவில் உள்ள உமையால் நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசியர் சித்ரா பொரணி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர். அரசு மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் குரல் அமைப்பு சார்பில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு மாணவ,மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

குளித்தலை-அரவக்குறிச்சி

குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் கொடியேற்றினார். குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான் கொடியேற்றி வைத்து விட்டு, பஸ்நிலையம் அருகேயுள்ள, காந்திசிலைக்கு குளித்தலை வட்டாட்சியர் மகாமுனியுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குளித்தலை நகராட்சியில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) புகழேந்தி கொடியேற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார். குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜயவிநாயகம் கொடியேற்றினார். அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஜெனிபர் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

Next Story