காரைக்காலில் குடியரசு தின கொண்டாட்டம் - கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்


காரைக்காலில் குடியரசு தின கொண்டாட்டம் - கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2020 4:15 AM IST (Updated: 27 Jan 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

காரைக்கால், 

காரைக்கால் பைபாஸ் சாலை அரசு விளையாட்டுத்திடலில் நேற்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து போலீசார், ஊர்க்காவல்படையினர், தீயணைப்பு வீரர்கள், மற்றும் பள்ளி, கல்லூரி என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களின் அணிவகுப்பும், அரசுத்துறை வாகனங்களின் அலங்கார ஊர்தியும் நடைபெற்றது.

விழாவில், அசனா எம்.எல்.ஏ., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால், தியாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பரிசளிப்பு விழா மற்றும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காரைக்கால் மேலவாஞ்சூரில் இயங்கி வரும் மார்க் கப்பல் துறைமுகம் சார்பில் நடந்த விழாவில் துறைமுக முதன்மை செயல் அதிகாரி கேப்டன் விஜய் நிக்கோடமஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி மரக்கன்று நட்டார்.

நிகழ்ச்சியில் முதன்மை துணைத்தலைவர் சீனிவாசராவ், துணைத்தலைவர் கிருஷ்ணராவ் நம்பியார், உதவி துணைத்தலைவர் ராஜேஸ்வரர் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிரவி ஓ.என்.ஜி.சி. திடலில் நடந்த குடியரசு தினவிழாவில் ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனரும், அசட் மேலாளருமான அனுராக் சர்மா தேசியக்கொடியை ஏற்றி வைத்து பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் தேசியக்கொடி ஏற்றினார். இதில் ஆணையர் ரவி மற்றும் தியாகிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

கோட்டுச்சேரி மற்றும் நெடுங்காடு கொம்யூனில், எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார். ஆணையர் செல்வம், மற்றும் பலர் கலந்துகொண்டனர். காரைக்கால் நகராட்சியில் ஆணையர் சுபாஷ் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.

Next Story