சுங்குவார்சத்திரம் அருகே பரிதாபம்: கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி


சுங்குவார்சத்திரம் அருகே பரிதாபம்: கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 27 Jan 2020 4:15 AM IST (Updated: 27 Jan 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் தவறி விழுந்ததில், கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானான்.

ஸ்ரீபெரும்புதூர், 

செங்கல்பட்டு மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சாந்தவேலுர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் மாதேஷ் (வயது 8). அதே பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவர் ஐ.டி.ஐ. படித்து வருகிறார்.

இந்த நிலையில் சஞ்சய் தன்னுடன் சிறுவன் மாதேஷை அழைத்து கொண்டு சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிள் நேற்று சென்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நோக்கி மோட்டார் சைக்கிள் சென்ற போது, வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நிலைத்தடுமாறிய சஞ்சய் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது சிறுவன் மாதேஷ் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து கிடந்தான். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மாதேஷ் மீது ஏறி இறங்கியது.

இதையடுத்து, சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி சிறுவன் மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த சஞ்சயை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் விபத்தில் பலியான சிறுவன் மாதேஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story