செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்
செங்கல்பட்டு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், சுங்கச்சாவடியை அந்த வழியாக வந்த பஸ் பயணிகள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீசார் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்ய வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். இங்கு தமிழ் தெரிந்த உள்ளூர் ஆட்களை பணியில் அமர்த்தினால் கட்டணம் செலுத்தாமல் செல்வதை தடுக்கவே வடமாநில ஆட்களை வைத்து கட்டணம் வசூல் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று பரனூர் சுங்கச்சாவடியில் வந்து நின்றது. அப்போது அரசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்பவருக்கும் இடையே கட்டணம் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே சுங்கச்சாவடி ஊழியர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் திடீரென்று பஸ்சை சுங்கச்சாவடியில் ஒரு வாசலில் குறுக்கே நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, பஸ்சில் இருந்து இறங்கி வந்த பயணிகள் டிரைவருக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து ஊழியர்களும் ஒன்றுதிரண்டு வந்து பஸ் பயணிகளிடம் தகராறு செய்தனர்.
இதனால் சுங்கச்சாவடியை நோக்கி வந்த வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. மேற்கொண்டு அவை நகர முடியாதபடி முண்டி அடித்ததில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த மற்ற அரசு பஸ் டிரைவர்கள் சுங்கச்சாவடிக்கு வந்து தாக்கப்பட்ட பஸ் டிரைவருக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர்.
மேலும் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகள் பெரும்பாலானோர் ஒன்று கூடி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர். அதன் பின்னர், அங்கிருந்த அனைத்து சுங்கச்சாவடியின் கண்காணிப்பு கேமராக்களையும், கண்ணாடிகளையும் உடைத்து நொறுக்கினர். மேலும், இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடியை அவர்கள் தீ வைத்து எரித்தனர்.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதை அறிந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தை தடுக்க முயன்றும், முடியாததால், ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த அசம்பாவித சம்பவம் நடந்து முடிந்ததை அடுத்து, பரனூர் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று முழுவதும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய ஆளில்லாமல் அனைத்து வாகனங்களும் இலவசமாக சென்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story