அலகுமலையில் 2-ந் தேதி ஜல்லிக்கட்டு: பார்வையாளர்கள் அமர்வதற்கு கேலரி அமைக்கும் பணி தீவிரம்


அலகுமலையில் 2-ந் தேதி ஜல்லிக்கட்டு: பார்வையாளர்கள் அமர்வதற்கு கேலரி அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:15 PM GMT (Updated: 26 Jan 2020 11:58 PM GMT)

பொங்கலூர் அருகே அடுத்த மாதம் 2-ந்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு பார்வையாளர்கள் அமர கேலரி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமை தாங்குகிறார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சிவாசலம் வரவேற்று பேசுகிறார்.

கோவை எம்.பி. நடராஜன், கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் தனபால் பரிசுகள் வழங்க உள்ளார்.

இந்த நிலையில் 3-வது ஆண்டாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெருந்தொழுவு செல்லும் சாலையில் அலகுமலை முருகன் கோவிலின் மேற்கு புறத்தில் போட்டி நடத்துவதற்கான இடம் சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர் போட்டி நடைபெறுவதற்கான கால்கோள் விழா கடந்த மாதம் 29-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சுமார் 400 அடி நீளத்திற்கு இருபுறமும் கேலரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் தெடர்ச்சியாக வாடி வாசலில் இருந்து வெளியேறும் காளைகள் நிறைவாக சென்று காளைகள் பிடிக்கப்படும் இடம் வரை இருபுறமும் சவுக்கு மற்றும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தனித்தனியாக பந்தல் அமைக்கப்படுகிறது. மாடுபிடி வீரர்கள் போட்டியின்போது காயம் அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்க போதுமான இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். குறிப்பாக இந்த ஆண்டு திருப்பூரை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த காளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியை காணவரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெறுகிறது. போட்டி நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ளதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story