கல்குவாரி அமைப்பதை தடுக்க வேண்டும் - குறைதீர்வு நாள் கூட்டத்தில் நம்பேடு கிராம மக்கள் மனு


கல்குவாரி அமைப்பதை தடுக்க வேண்டும் - குறைதீர்வு நாள் கூட்டத்தில் நம்பேடு கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 27 Jan 2020 10:15 PM GMT (Updated: 27 Jan 2020 4:42 PM GMT)

கல்குவாரி அமைப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் நம்பேடு கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும் கலெக்டர் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதில் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் வந்தவாசி தாலுகா நம்பேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மேற்கண்ட கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றோம். இந்த ஊராட்சியின் அருகில் செப்டாங்குளம் கிராமம் உள்ளது. எங்கள் பகுதியில் புதிதாக தொடங்க உள்ள கல்குவாரியால் எங்களின் விவசாய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்பு அடையும். இதன் அருகில் மிக பெரிய பழமை வாய்ந்த குளம் உள்ளது. இங்கு கால்நடைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.

நாங்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், எங்கள் குடும்பங்களின் நலனை கருதியும் புதிய கல்குவாரி அமைப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளி உள்ளடங்கிய பள்ளி ஆயத்த மைய பொறுப்பாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 மாற்றுத்திறனாளி உள்ளடங்கிய பள்ளி ஆயத்த மையங்களில் மைய பொறுப்பாளர்களாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் குழந்தைகளை மிகவும் சிறப்பாக எங்களுடைய குழந்தைகளை போல் பாதுகாத்து வருகின்றோம். நாங்கள் பள்ளிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா உதவி மற்றும் பணிகளையும் 8 மணி நேரத்திற்கு மேலாக செய்து வருகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் விலைவாசி உயர்ந்து கொண்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதுமானதாக இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றோம். இதனால் எங்களின் வாழ்வாதாரத்தில் எந்தவிதத்திலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு கூடுதலாக எந்தவித சிறப்பு மற்றும் ஊதிய உயர்வோ அல்லது பணி நிரந்தரமோ வழங்கப்படவில்லை. எனவே எங்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் விலைவாசி உயர்வு காரணத்தால் எங்கள் ஊதியத்தினை உயர்த்தி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தண்டராம்பட்டு மோத்தக்கல் பகுதியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க சரவஸ்தி என்பவர் அளித்துள்ள மனுவில், என்னுடைய கணவர் பெயர் ஆறுமுகம். எங்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். கணவர் ஆறுமுகம் பெயரில் இருந்த சொத்துகள் என்னுடைய சுய நினைவு இல்லாமல் என்னிடம் இருந்து எழுதி வாங்கிக்கொண்டனர். தற்போது என்னை யாரும் கவனிக்கவில்லை. எனவே, என்னை ஏமாற்றி எழுதிய சொத்து பத்திரத்தை ரத்து செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story