திண்டுக்கல் வழியாக வெளியூர்களுக்கு செல்லும் ரெயில்களில், முன்பதிவு இருக்கைக்கு முன்னுரிமை கிடைக்காமல் அவதிப்படும் முதியவர்கள்


திண்டுக்கல் வழியாக வெளியூர்களுக்கு செல்லும் ரெயில்களில், முன்பதிவு இருக்கைக்கு முன்னுரிமை கிடைக்காமல் அவதிப்படும் முதியவர்கள்
x
தினத்தந்தி 27 Jan 2020 10:15 PM GMT (Updated: 27 Jan 2020 5:03 PM GMT)

திண்டுக்கல் வழியாக வெளியூர்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு இருக்கைக்கு பதிவு செய்யும் போது முன்னுரிமை கிடைக்காமல் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல்,

மதுரையில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பயணிகள், விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் அனைத்தும் திண்டுக்கல் வழியாகவே அந்த ஊர்களுக்கு சென்று வருகின்றன. இதன் காரணமாக திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

திண்டுக்கல்லில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வியாபாரிகள், உறவுகளை பார்ப்பதற்காக செல்லும் பயணிகள், கொடைக்கானல், பழனிக்கு சுற்றுலா வந்துவிட்டு செல்லும் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு ரெயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வந்து செல்வார்கள்.

இவ்வாறு வரும் பயணிகள், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

திண்டுக்கல் ரெயில் நிலையம் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் டிஜிட்டல் சேவை முறையாக கிடைப்பதில்லை என்பது வருத்தமளிக்கிறது. உதாரணமாக, ரெயில் நிலையத்துக்குள் நுழைந்ததுமே எந்தெந்த ரெயில்கள் திண்டுக்கல்லுக்கு வந்து செல்கிறது என்பதை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகையில் ரெயில் எண், பெயர், திண்டுக்கல்லுக்கு வரும் நேரம், புறப்படும் நேரம், நடைமேடை எண் ஆகியவை வெளியிடப்படும். அது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த அறிவிப்பு பலகை முறையாக செயல்படுவதில்லை. இதனால் எங்கள் ஊருக்கு செல்லும் ரெயில் எந்த நடைமேடைக்கு வருகிறது என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியவில்லை.

அதேபோல் ரெயில் நிலையத்துக்கு ரெயில்கள் வந்து நின்றதும், படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு இருக்கைகள் கொண்ட பெட்டிகளில் தங்களுக்கான இருக்கைகள் உள்ள பெட்டியை அதற்கான குறியீட்டு எண் (அதாவது எஸ்.1, எஸ்.2 போன்ற எண்கள்) மூலமே பயணிகள் அறிந்துகொள்வார்கள். இந்த குறியீட்டு எண்ணை பயணிகள் எளிதில் பார்த்து தங்களுக்கான பெட்டிகளுக்கு விரைந்து செல்வதற்காக நடைமேடையில் அந்தந்த பெட்டிகளின் அருகில் பெட்டிகளின் குறியீட்டு எண் பயணிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பலகையில் குறிப்பிடப்படும் குறியீட்டு எண்ணுக்கும், அதன் அருகில் இருக்கும் பெட்டியில் இருக்கும் குறியீட்டு எண்ணுக்கும் சம்பந்தம் இருக்காது. இதனால் எங்களுக்கான இருக்கைகளை தேடி அலையும் நிலை உள்ளது. மேலும் சில நேரங்களில் குறியீட்டு எண்ணை தெரிவிக்கும் அறிவிப்பு பலகையும் வேலை செய்யாது. அத்துடன் முதியவர்களுக்கு ‘சீனியர் சிட்டிசன்’ முறைப்படி ரெயில் பயணத்தின் போது கட்டணத்தில் சலுகை, ‘லோயர் பெர்த்’ இருக்கை பெறுவதில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். ஆனால் திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் ரெயில்களில் இருக்கை முன்பதிவு செய்யும் முதியவர்களுக்கு ‘லோயர் பெர்த்’ இருக்கை முன்னுரிமை பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. ‘அப்பர் பெர்த்’ இருக்கைகளே வழங்கப்படுகின்றன. இதனால் முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயணிகளின் புகார் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி தற்போது நடக்கிறது. இதனால் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்குள் வருமா? என்பது சந்தேகமே. இதன் காரணமாகவே ரெயில்கள் வருவது குறித்து தெரிவிக்கும் அறிவிப்பு பலகை அவ்வப்போது செயல்படாமல் உள்ளது. மேலும் அந்த அறிவிப்பு பலகை தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ரெயில் தாமதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் ரெயில்கள் வரும் நேரத்தை மாற்றி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.

இனிவரும் காலங்களில் அதுபோன்று செய்வதற்கு அந்த தனியார் நிறுவனத்திடம் அறிவுறுத்தப்படும். முதியவர்களுக்கான சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறது. இருக்கை முன்பதிவு செய்யும் போது, ‘சீனியர் சிட்டிசன்’ என்பதற்கான ஆவணங்களை காட்டி அந்த சலுகைகளை பெறலாம்.

இருக்கைகள் இல்லாத பட்சத்திலேயே அவர்கள் கேட்கும் இருக்கை முன்னுரிமை வழங்க முடிவதில்லை. அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்படும் குறியீட்டு எண் அடிப்படையில் ரெயில் பெட்டிகள் இருக்கும்படி ரெயிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story