மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ந‌‌ஷ்டஈடு பெற்று தரக்கோரி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ந‌‌ஷ்டஈடு பெற்று தரக்கோரி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jan 2020 10:30 PM GMT (Updated: 27 Jan 2020 5:49 PM GMT)

தனக்கு ந‌‌ஷ்டஈடு பெற்று தரக்கோரி பெரம்பலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த அரங்கிற்கு ஆண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவர் மட்டும், கூட்ட அரங்கிலேயே மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அரசு ஊழியர்கள் முன்பாக இடுப்பில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு, தீப்பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுத்துள்ளார். இதனை கண்ட அரசு அலுவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி போலீசாரை வரவழைத்தனர். பின்னர் அவரை போலீசார் வெளியே அழைத்து சென்று அங்குள்ள கழிவறையில் வைத்து குளிக்க வைத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டம், ரஞ்சன்குடி காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அருள்செல்வம் (வயது 27) என்பதும், அவருடன் வந்திருந்தவர்கள் அவரது மனைவி கவிதா, மகள் அக்‌‌ஷயா மற்றும் தாய் சரோஜா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அருள்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கீழப்புலியூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வாலிகண்டபுரம் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் அருள்செல்வம் மீது, அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் இது தொடர்பாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த புகார் தொடர்பாக பெரம்பலூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்றதில் இருந்து வேலைக்கு ஏதும் அருள்செல்வம் செல்லமுடியாததால் குடும்பத்தினரை கவனிக்க முடியவில்லையாம். எனவே மாவட்ட நிர்வாகம் அவருக்கு ந‌‌ஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். ஆனாலும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த அருள்செல்வம் மீண்டும் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அப்போதும் அவர் மனு மீது சரியான விசாரணை இல்லாததால் உடனடியாக வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அருள்செல்வம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தனது குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அருள்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், கோர்ட்டில் வழக்கை விரைந்து நடத்தி எனக்கு ந‌‌ஷ்டஈடு பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாலும் அவரை மாற்ற வேண்டும் என்றார்.

வேப்பந்தட்டை தாலுகா எறையூர் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் நரிக்குறவர் நலச்சங்க செயலாளர் பாபு ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள அரசு கொடுத்த புறம்போக்கு நிலத்தில் 43 ஆண்டு காலமாக பரம்பரை, பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு அந்த இடத்திற்கு உடனடியாக நில பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எறையூர் முதல் நரியோடை மற்றும் மங்களமேடு, நமையூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூரை சேர்ந்த செவிலியர் பயிற்சி படிக்கும் மாணவிகளான தமிழ்மணி, புரவித்தாய், இலக்கியா ஆகியோர் கொடுத்த மனுவில், நாங்கள் 3 பேரும் கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்து முடித்தோம். ஆனால் எங்களுடன் பயின்ற சக மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி கொடுக்கப்பட்டு விட்டது. எங்களுக்கு கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தி மடிக்கணினி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 280 மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் பெற்று கொண்டார். அவர் அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story