5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்


5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 27 Jan 2020 10:45 PM GMT (Updated: 27 Jan 2020 6:00 PM GMT)

கோவையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் படிக்காமல் வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் மண் சட்டி, மண்வெட்டி, கடப்பாரை ஆகியவற்றுடன் பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையுடன் வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குழந்தை தொழிலாளர்களை உருவாக்காதே, ஆரம்ப கல்வி இடைநிற்றலை உருவாக்காதே என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தியிருந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் மண் சட்டியுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்துள்ளது. பொதுத் தேர்வு எழுதும் அளவிற்கு கிராமப்புற மாணவர்கள் மனபக்குவம் அடையவில்லை. இதனால் அவர்கள் மனஅழுத்தம் அடைவதோடு மட்டுமல்லமாமல் பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். 5-ம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லையென்றால் அவன் மேற்கொண்டு படிக்க செல்ல மாட்டான். இதனால் தொடக்க கல்வியில் இடை நிற்றல் அதிகமாகும். ஏழை மாணவர்கள் வேலைக்கு செல்வார்கள். இதனால் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவு. ஆனால் நகர்ப்புறங்களில் இது சாத்தியம். பொதுத் தேர்வு நடத்துவதின் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு பொது கேள்வித்தாள் சாத்தியமில்லை. அந்த தேர்வுகளில் அவர்களால் வெற்றி பெற முடியாது. எனவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் நடைமுறையை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சுசி கலையரசன்(விடுதலை சிறுத்தைகள்), வெண்மணி(திராவிடர் தமிழர் கட்சி), ரவிக்குமார்(ஆதி தமிழர் பேரவை), ரகூப் பிரசாத்(எஸ்.டி.பி.ஐ.) மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story