கும்பகோணம் பகுதியில், அறுவடை எந்திரம் தட்டுப்பாடு - விவசாயிகள் கவலை


கும்பகோணம் பகுதியில், அறுவடை எந்திரம் தட்டுப்பாடு - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 27 Jan 2020 10:15 PM GMT (Updated: 27 Jan 2020 7:22 PM GMT)

கும்பகோணம் பகுதியில் அறுவடை எந்திரம் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சம்பா, தாளடியாக நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். போதிய அளவு மழை பெய்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரத்து போதுமான அளவு உள்ளதாலும் சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளது.

தற்போது அனைத்து நெற்பயிர்களும், கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி உள்ளன. அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன. அறுவடைக்கு போதுமான எந்திரம் கிடைக்காததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து அறுவடை எந்திரம் வருவது வழக்கம். ஆனால் தற்போது அந்த பகுதியில் இருந்து அறுவடை எந்திரங்கள் வரவில்லை.

அறுவடை எந்திரம் தட்டுப்பாடு காரணமாக நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். விவசாயம் சரியாக நடக்காததால் விவசாய தொழிலாளர்கள் மற்ற மாவட்டங்களுக்கு பணிக்கு சென்று விட்டனர். இதனால் ஆட்கள் மூலமும் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.

இதனால் நெற்பயிர்கள் தற்போது சாய தொடங்கி விட்டன. இதனால் என்ன செய்வது என தெரியாமல் நாங்கள் கவலையில் உள்ளோம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வேளாண்மைத்துறை மூலம் தேவைக்கேற்ற வகையில் அறுவடை எந்திரத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story