அப்போதி அடிகள் குருபூஜைக்கு அனுமதி மறுப்பு: சங்கரநாராயணசுவாமி கோவிலில் பல்வேறு அமைப்பினர்-அரசியல் கட்சியினர் தர்ணா
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் அப்போதி அடிகள் குருபூஜைக்கு சைவ சித்தாந்த சபைக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து நேற்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.
சங்கரன்கோவில்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுக்கான கட்டணத்தை சமீபத்தில் உயர்த்தி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள 63 நாயன்மார்கள் குருபூஜைக்கு ரூ.100 கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று நாயன்மார்களில் ஒருவரான அப்போதி அடிகளுக்கு குருபூஜை நடத்த வழக்கம் போல், சைவ சித்தாந்த சபையினர் கோவிலுக்கு சென்றனர். அப்போது ரூ.2,500 கட்டணம் செலுத்தினால் மட்டுமே குருபூஜை நடத்த அனுமதிக்கப்படும் என கோவில் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு சைவ சித்தாந்த சபையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தநிலையில், திடீரென்று அப்போதி அடிகள் குருபூஜை கோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சைவ சித்தாந்த சபையினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். கடந்த 43ஆண்டுகளாக இந்த பூஜையை நாங்கள் தான் நடத்தி வருகிறோம். இந்த பூஜையை கோவில் நிர்வாகம் நடத்தியதை ஏற்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து கோவில் ஊழியர்களுக்கும், அந்த சபையினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்த அகில பாரத அய்யப்பா சேவா சங்கம், அர்த்தசாம வழிபாட்டு குழு, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், ம.தி.மு.க., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு குவிந்தனர். கோவில் நிர்வாகத்தை கண்டித்து நேற்று இரவு 7 மணி முதல் 63 நாயன்மார்கள் சன்னதி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக கோவிலுக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய பிரியா தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது.
இதற்கிடையில் ஒரு பக்தர் திடீரென நாயன்மார்கள் சன்னதிக்குள் புகுந்து அப்போதி அடிகள் சிலைக்கு அபிஷேகம் செய்தார். இதை தொடர்ந்து அவரிடம் கோவில் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு கோவிலில் அர்த்தசாம பூஜை நடத்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போதி அடிகள் குருபூஜை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அந்த பூஜை நடத்தக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதை தொடர்ந்து நேற்று கோவிலில் அர்த்தசாம பூஜை நடைபெறவில்லை
Related Tags :
Next Story