கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட ஓட்டலை அகற்ற வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ஓட்டலை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த ஹென்றி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
கொடைக்கானலில் உள்ள ஒரு ஓட்டலில் பங்குதாரராக உள்ளேன். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அந்த ஓட்டல் கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் புதிய மாஸ்டர் பிளான் அடிப்படையில் எங்கள் கட்டிடத்தை மாற்றி அமைக்கும் வகையில் ஓட்டலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கொடைக்கானல் நகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது மொய்தீன், “மனுதாரர் குடியிருப்புக்கான கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெற்றுள்ளார். ஆனால் அவர்கள் கட்டியுள்ளதோ வணிக நோக்கிலான ஓட்டல் ஆகும். விதிகளை மீறி கட்டப்பட்ட அவர்களின் கட்டிடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் முறைப்படி சீல் வைத்துள்ளனர்” என்றார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில், எங்கள் கட்டிடத்தில் உள்ள விதிமீறல் பகுதியை நாங்கள் அகற்றிவிடுகிறோம். இதற்கு அனுமதி அளிக்க கொடைக்கானல் நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிவில் நீதிபதிகள், “விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிட பகுதியை மனுதாரர் அகற்றி விட வேண்டும். பின்னர் புதிய மாஸ்டர் பிளான் அடிப்படையில் கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கலாம். அதன்பேரில் நகராட்சியினர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story