வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு: தொகுதியை திருக்கோவிலாக பார்க்க வேண்டும் - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேச்சு
தொகுதியை திருக்கோவிலாக பார்க்க வேண்டும் என்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசினார்.
வேலூர்,
வேலூர் அண்ணாசாலையில் உள்ள பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். மேலும் அலுவலக பெயர் பலகையையும் திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து நடந்த விழாவுக்கு வேலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்றார். எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி.ஏற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் வித்தியாசம் உள்ளது. படிக்காதவர்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்ற முடியாது.
கதிர்ஆனந்த் அமெரிக்காவில் படித்தவர். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசக்கூடியவர். எனது வேலை அவரை மரத்தில் தூக்கிவிடுவது. அதை நான்செய்துவிட்டேன். இனி மரத்தில் ஏறுவது அவருடைய வேலை.
நீங்கள் எப்படி ஒரேதொகுதியில் தொடர்ந்து வெற்றிபெறுகிறீர்கள் என்று கேட்பார்கள். நான் காட்பாடியை தொகுதியாக பார்க்கவில்லை. திருக்கோவிலாக பார்க்கிறேன். தனது தொகுதியை திருக்கோவிலாக கருதுபவர்கள்தான் மீண்டும் ஜெயிக்கமுடியும். எனவே தொகுதியை திருக்கோவிலாக பார்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கதிர்ஆனந்த் எம்.பி. பேசுகையில் அணைக்கட்டு தொகுதி நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் என்று கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் துரைமுருகன் பேசினார். அவர் கூறுகையில் இப்போதுள்ள இளைஞர்கள் துடிப்பாக இருக்கிறார்கள். அதுதான் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் என்கிறார். இதை சொல்லும் அதிகாரம் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. அவருக்கு துணையாக இருக்கும் எனக்கும் உண்டு என்றார்.
விழாவில் முன்னாள் எம்.பி. முகமதுசகி, எம்.எல்.ஏ.க்கள் எ.நல்லதம்பி, அ.செ.வில்வ நாதன், எஸ்.காத்தவராயன், ஜே.எல்.ஈஸ்வரப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ம.தி.மு.க. சுப்பிரமணி ஆகியோரும் பேசினர்.
நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-
கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்றிவிட்டார்கள், தற்போது சுகாதாரத்துறையில் கைவைத்துள்ளார்கள். அடுத்து போலீஸ், நிதி என்று கைவைத்து, மாநிலஅரசை ஒரு பஞ்சாயத்துபோன்று ஆக்கிவிடுவார்கள். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் பலநாள்திருடர்கள் இப்போது சிக்கியிருக்கிறார்கள். அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story