பார்வதிபுரம் அருகே துணிகரம்: எலக்ட்ரீசியன் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை - கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
பார்வதிபுரம் அருகே எலக்ட்ரீசியன் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
அழகியமண்டபம்,
பார்வதிபுரம் அருகே களியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 32), ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். பின்னர், நேற்று காலையில் திரும்ப வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க கம்மல், காப்பு, தங்க சங்கிலி என 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டனர்.
இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பூட்டிய வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story