மாதவரத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் 4 குடிசைகள் எரிந்து சாம்பல் - வீட்டுக்குள் சிக்கிய மகளை காப்பாற்றிய தாய் காயம்


மாதவரத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் 4 குடிசைகள் எரிந்து சாம்பல் - வீட்டுக்குள் சிக்கிய மகளை காப்பாற்றிய தாய் காயம்
x
தினத்தந்தி 28 Jan 2020 3:45 AM IST (Updated: 28 Jan 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

மாதவரத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் 4 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. வீட்டுக்குள் சிக்கிய மகளை காப்பாற்றிய தாய் தீக்காயம் அடைந்தார்.

செங்குன்றம், 

சென்னையை அடுத்த மாதவரம் அசிசி நகரில் மணி, குணா, தயாளன், தாஜ் ஆகிய 4 பேர் அடுத்தடுத்து குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 4 பேரும் தங்கள் குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களது குடிசைக்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்வயர் திடீரென அறுந்து குடிசை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 குடிசைகளும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் வீட்டில் படுத்து இருந்தவர்கள், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம், மணலி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடிசைகளில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் 4 குடிசை வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. வீட்டில் இருந்த ஆவணங்கள், டி.வி., பீரோ உள்ளிட்ட பொருட்கள், 6 பவுன் தங்க நகை, ரூ.12 ஆயிரம் மற்றும் வெள்ளி சாமான்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

முன்னதாக குடிசையில் தீப்பிடித்து எரிந்தபோது தாஜ் என்பவரின் மனைவி வரலட்சுமி, குடிசையில் இருந்த சிலிண்டர்களை பாதுகாப்பாக வெளியே எடுத்து வைத்தார். அப்போதுதான் அவருடைய 2 வயது மகள் குடிசையில் சிக்கிதவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

எரியும் குடிசைக்குள் சென்ற வரலட்சுமி, தனது மகளை கட்டி அணைத்தப்படி காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார். அப்போது வரலட்சுமியின் கை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அரசு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார். வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்து குறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story