மாவட்ட செய்திகள்

சாலை தடுப்பு சுவரில் கார் மோதல்; மின்வாரிய அதிகாரி-ஊழியர் பலி + "||" + Car collision on a road block wall; Electricity officer-employee kills

சாலை தடுப்பு சுவரில் கார் மோதல்; மின்வாரிய அதிகாரி-ஊழியர் பலி

சாலை தடுப்பு சுவரில் கார் மோதல்; மின்வாரிய அதிகாரி-ஊழியர் பலி
ஆவடி அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
ஆவடி, 

சென்னை எண்ணூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தெர்மல் அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 2-ல் மின்வாரிய உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர் கமலக்கண்ணன் (வயது 37). இவர், எண்ணூர் அனல் மின்நிலையத்தின் உள்ளே உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவருடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். இவருடைய மனைவி தனலட்சுமி (29). இவர்களுக்கு கிர்த்திக் குமார் (3) என்ற ஒரு மகன் உள்ளான்.

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் புதிதாக சொந்த வீடு கட்டி உள்ளார். இதனால் சொந்த வீட்டுக்கு குடிபெயர்வதற்காக அனல்மின் நிலைய குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்த பொருட்களை மினி லாரியில் ஏற்றி, அதில் உறவினரான மோகனகண்ணன் என்பவரை அனுப்பி வைத்தார்.

பின்னர் கமலக்கண்ணன், தனது காரில் அதே மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் எண்ணூரைச் சேர்ந்த சரண்ராஜ் (29) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று மதியம் எண்ணூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை சர்வீஸ் சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சரண்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய கமலக்கண்ணனை அவரது உறவினர்கள் மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கமலக்கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.