பெங்களூருவில் கண்காணிப்பு கேமராக்களில் சுவிங்கம் ஒட்டி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது


பெங்களூருவில் கண்காணிப்பு கேமராக்களில் சுவிங்கம் ஒட்டி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2020 11:39 PM GMT (Updated: 27 Jan 2020 11:39 PM GMT)

பெங்களூருவில் கண்காணிப்பு கேமராக்களில் சுவிங்கத்தை ஒட்டிவிட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். எச்சரிக்கை மணி ஒலித்ததால் அவர்கள் பணத்துடன் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தீபாஞ்சலிநகர் அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த 2 பேர், ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்தார்கள். முன்னதாக அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் சுவிங்கத்தை ஒட்டினர். மேலும் கியாஸ் கட்டர் மூலமாகவும் எந்திரத்தின் பாகங்களை உடைத்தனர். இதற்கிடையில், ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்தது. இதுபற்றி வங்கி மேலாளரின் கவனத்திற்கும் வந்தது.

உடனே அவர், மைசூரு ரோட்டில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஒய்சாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பேடராயனபுரா போலீசாரும் அங்கு சென்றார்கள். அப்போது ஏ.டி.எம். மையத்திற்குள் இருந்து சத்தமும் கேட்டது. இதனால் கொள்ளையர்கள் உள்ளே இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் ஏ.டி.எம்.-மின் இரும்பு கதவை போலீசார் திறந்தனர். அப்போது பணப்பை, கியாஸ் கட்டர் மற்றும் இரும்பு கம்பியுடன் அங்கிருந்து மர்ம நபர்கள் 2 பேரும் தப்பிச்செல்ல முயன்றனர். உடனே அவர்களை போலீசார் பிடிக்க முயற்சித்தனர். இதனால் தங்களிடம் இருந்த இரும்பு கம்பியால் போலீசாரை 2 பேரும் தாக்க முயன்றனர். ஆனாலும் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். விசாரணையில், அவா்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷா அரோலா, சுர்பித் என்று தெரிந்தது.

மேலும் அவர்கள் வைத்திருந்த பணப்பை, கியாஸ் கட்டர், இரும்பு கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.15 லட்சம் இருந்தது. எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இல்லையேல் அவர்கள் ரூ.15 லட்சத்துடன் தப்பி சென்றிருப்பார்கள் என்று தெரியவந்தது.

கைதான ஹர்ஷா அரோலா, சுர்பித் மீது பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story