குடியரசு தினவிழாவில் விதிமுறை மீறல்: கவர்னர் கிரண்பெடி மன்னிப்பு கேட்கவேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்


குடியரசு தினவிழாவில் விதிமுறை மீறல்: கவர்னர் கிரண்பெடி மன்னிப்பு கேட்கவேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jan 2020 12:26 AM GMT (Updated: 28 Jan 2020 12:26 AM GMT)

குடியரசு தினவிழாவில் விதிமுறைகளை மீறி நடந்த கவர்னர் கிரண்பெடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி, 

குடியரசு தினவிழாவில் கொடியேற்ற வருகை தரும் ஜனாதிபதி, கவர்னரை அதிகாரிகள் வணக்கம் தெரிவித்து வரவேற்பார்கள். பதிலுக்கு அவர்களும் வணக்கம் தெரிவிப்பார்கள். ஆனால் புதுவையில் கவர்னர் கிரண்பெடியை வரவேற்ற அதிகாரிகளுக்கு அவர் பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை.

அலங்கார வண்டிகள் செல்லும்போது செல்போனை வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கிறார். அவர் விதிமுறைகள் எதையும் கடைபிடிக்கவில்லை. மாலையில் நடந்த தேனீர் விருந்திலும் அதேபோல் விதிமுறைகளை மீறினார்.

இங்கு முன் அறிவிப்பின்றி திடீரென பத்ம விருதுகள் பெற்றவர்களை பாராட்ட வேண்டும் என்றார்கள். பத்ம விருதுகள் பெற்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். அதற்காக விதிமுறைகளை மீறி செய்யக்கூடாது. இதையெல்லாம் கண்டித்துதான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். கவர்னருக்கு நிர்வாகமும், விதிமுறையும் தெரியவில்லை. குடியரசு தின நிகழ்ச்சிகளில் நடந்துகொண்ட விதத்துக்கு முதலில் கவர்னர் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story