கல்லல் அருகே, மஞ்சுவிரட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள்


கல்லல் அருகே, மஞ்சுவிரட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:30 PM GMT (Updated: 28 Jan 2020 2:51 PM GMT)

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகளை மல்லுக்கட்டி இளைஞர்கள் அடக்கினர்.

கல்லல்,

காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே உள்ள தேவப்பட்டு கிராமத்தில் உள்ள அந்தரநாச்சியம்மன் கோவில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 11 மணிக்கு தேவப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் மஞ்சுவிரட்டு தொழுவத்திற்கு முன்பு மண் பானையில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அந்த பொங்கலை எடுத்து கிராமத்திற்கு கொண்டு சென்றனர். இந்த செவ்வாய் பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இதன்படி நேற்று காலை 10 மணி முதல் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 500–க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு தேவப்பட்டு கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதை அங்கிருந்த மாடு பிடி வீரர்கள், இளைஞர்கள் உற்சாகமாக விரட்டி சென்று காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்கினர். சில காளைகள் சீறி பாய்ந்து சென்றன. சில காளைகள் வீரர்களை தூக்கி எறிந்து விட்டு சென்றது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கட்டுமாடு அவிழ்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கிராம மக்கள் மற்றும் பெண்கள் அம்மனுக்கு படைக்க வித, விதமான பூக்களால் ஆன மாலைகளை சுமந்து வந்நதனர். அவர்கள் தேவப்பட்டு கிராமத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அந்தரநாச்சியம்மனுக்கு மாலைகளை காணிக்கையாக செலுத்தினர். இதையடுத்து மஞ்சுவிரட்டு தொழுவத்தில் இருந்த 100–க்கான காளைகள் நின்றிருந்தன.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தேவகோட்டை கோட்டாட்சியர் சங்கரநாராயணன், காரைக்குடி தாசில்தார் பாலாஜி ஆகியோர் தலைமையில் அங்கிருந்த மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். பின்னர் மஞ்சுவிரட்டு தொழுவத்தில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதை அங்கிருந்த மாடு பிடிவீரர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் மாடு பிடி வீரர்களிடம் பிடிப்பட்டது. சில காளைகள் அவர்களிடம் பிடி படாமல் சென்றது. விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ஆனந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் செம்பனூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின்ஜேம்ஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைஅளித்தனர். இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சிறுவன் மட்டும் காயமடைந்தான் அவனுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். மேலும் தேவப்பட்டு மஞ்சுவிரட்டை முன்னிட்டு கிராமத்தில் உள்ள வீடுகள் தோறும் விருந்து நடைபெற்றது.

Next Story