குடியாத்தம் அருகே, விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - பயிர்கள் நாசம்
குடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் 20 காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.
குடியாத்தம்,
குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, மோடிகுப்பம், தனகொண்டபல்லி, கல்லப்பாடி அருகே உள்ள அனுப்பு உள்ளிட்ட பகுதி வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது. இந்த பகுதியில் உள்ள விளை நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் மான்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும் இப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கிருந்தும் யானைகள் தமிழக எல்லைக்குள் வந்து கிராமப்புற பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துகிறது. கடந்த 2 மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தினமும் வாழை, மா, பப்பாளி, தக்காளி மற்றும் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் குழுக்களாக பிரிந்து தனகொண்டபல்லி பகுதியில் உள்ள சங்கர், சந்திரன், கண்ணாயிரம், குத்தூஸ், நாகராஜன், பாஸ்கரன், சந்திரபாபு, பிச்சாண்டி உள்ளிட்ட விவசாயிகளின் விளை நிலங்களிலும், கல்லப்பாடி அருகே உள்ள அனுப்பு பகுதியில் வெங்கடேசன் என்பவரது நிலத்திலும் புகுந்து வாழை, ராகி, தக்காளி, பப்பாளி, நெற்பயிர், பாகற்காய், சுரக்காய் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது.
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு வனவர்கள் ரவி, முருகன், பிரகாஷ், வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், பிரபு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கிராமமக்கள் உதவியுடன் மேளங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் யானைகளை விரட்டினர். அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் பிரபு, தோட்டக்காவலர் கோவிந்தன் ஆகியோரை யானைகள் விரட்டியது. அவர்கள் தப்பி ஓடிய போது சிறு காயங்கள் ஏற்பட்டன.
காட்டிற்குள் விரட்டப்பட்ட யானைகள் கூட்டம் மீண்டும் நேற்று அதிகாலை வேளையில் விளை நிலங்களுக்குள் புகுந்தது. திரும்பவும் அந்த யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி மற்றும் வனத்துறையினர் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
Related Tags :
Next Story