திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டம் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டம் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 5:09 PM GMT)

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டம் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் சரண்யாதேவி வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு, சி.என்.அண்ணாதுரை எம்.பி., திருவண்ணாமலை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசுகையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நீங்கள் கட்சி சார்பற்று மாவட்டம் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் தேர்தல் சிறப்பாக நடந்து உள்ளது. மாவட்டத்தில் ஆண்டு தோறும் எப்படியும் 4 மாதத்திற்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும். எனவே, தண்ணீர் பற்றாக்குறையை போக்க தேவையான தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலுவலகமானது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடமின்றி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Next Story