தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் - மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்


தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் - மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:30 PM GMT (Updated: 28 Jan 2020 7:15 PM GMT)

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை,

தஞ்சை பெருவுடையார் எனும் பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. சமஸ்கிருத மொழியில் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்த விழாவில் முழுக்க முழுக்க தமிழிலேயே திருமுறைகள் சொல்லப்பட வேண்டும், வேத மந்திரங்கள் அனைத்தும் தமிழிலேயே படித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெறவில்லை, எனவே அந்த விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை மைலாப்பூரை சேர்ந்த ரமே‌‌ஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை கோவில் கும்பாபிஷேகத்தை சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் எந்த மொழியில் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சார்பில் தாக்கலான பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தஞ்சை கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த விழாவையொட்டி நடக்கும் யாகசாலை பூஜையில் அபிராமி அந்தாதி, பன்னிருத ிருமுறைகள், திருப்புகழ், திருமுறை பாராயணம் ஆகியவற்றை படிப்பதற்காக பக்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விழாவின்போது தேவாரம், திருமுறைகளை பாடுவதற்கு அங்குள்ளவர்களுடன் மதுரை ஆலவாய் அன்னல் அறக்கட்டளை, சிதம்பரம் ஆலவாய் அன்னல் அறக்கட்டளை தேவார பாடசாலை ஆகிய இடங்களில் இருந்து 80 பேர் வர உள்ளனர். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆகம கருத்துகளின்படி தமிழ், சமஸ்கிருதம் பயன்படுத்தப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான உதவி கமி‌‌ஷனர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘தஞ்சை பெரியகோவிலானது தொல்லியல் துறை பராமரிப்பின்கீழ் உள்ளது. அங்கு பூஜை நேரங்களில் திருமுறைகள் ஓதுவதற்காக ஓதுவார்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லா பூஜையின்போதும் திருமுறை ஓதப்படுகிறது.

வருகிற 5-ந்தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலையில் திருமுறைகளை படிக்க ஏராளமான சிவனடியார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை யாகசாலையில் திருமுறைகளை பாடுவதற்கு 13 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதே நாட்களில் கோவிலின் நடராஜர் மண்டபத்தில் திருமுறை, பண்ணிசை பாராயணத்தை 35 பேர் பாட உள்ளனர். 5-ந்தேதியன்று நந்தி மண்டபத்தில் திருமுறை பாராயணத்தை ஓதுவார்களும், குழந்தைகளும் பாட உள்ளனர்.

எந்த ஒரு புகாருக்கும் இடமளிக்காத வகையில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இந்த விழாவுக்கான பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன, என்று கூறி இருந்தார்.

மேலும், கோவிலில் பாதுகாப்பு கருதி யாகசாலைகளை கோவிலின் வெளிப்பகுதியில் அமைத்துள்ளோம்“ என அறநிலையத்துறை வக்கீல் தெரிவித்தார்.

பின்னர் மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அரசின் வேத ஆகம பாடசாலைகளில் அனைத்து சாதியை சேர்ந்த அர்ச்சகர்களும் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்கள் தான். அவர்களை வைத்து கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட வேண்டும்“ என்றார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்குகளை இன்றைக்கு(புதன்கிழமை) ஒத்தி வைத்து உத்தர விட்டனர்.

Next Story