தஞ்சை பெரியகோவிலில் 5-ந் தேதி கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு


தஞ்சை பெரியகோவிலில் 5-ந் தேதி கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
x
தினத்தந்தி 28 Jan 2020 11:15 PM GMT (Updated: 28 Jan 2020 7:16 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் வருகிற 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்தார். மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீஸ்துறை சார்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் கும்பாபிஷேகத்தை காண வசதியாக கோவில் வளாகத்திற்குள் இரும்பினால் ஆன 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பெரியகோவிலில் உள்ள மராட்டா கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம், திருச்சுற்றுமாளிகை, கோவில் சுற்றுப்பிரகாரம் என கோவில் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர யாகசாலை, முக்கிய பிரமுகர்கள் வருகை, மக்கள் சந்திக்கும் இடம் என நகர் பகுதியில் 160 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை எல்லாம் கண்காணிப்பதற்காக பெரியகோவில் எதிரே கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெரியகோவிலுக்கு வரும் பக்தர்களையும், பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளையும் சோதனை செய்ய ராஜராஜன் கோபுர வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 2 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முதல் பெரியகோவில் முழுவதையும் போலீசார் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

மராட்டா கோபுர நுழைவு பகுதியிலும், சிவகங்கை பூங்கா முன்பகுதியிலும் கூடுதலாக மெட்டல் டிடெக்டர் கருவி வைக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் கோபுரம் நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலில் சீரமைப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கூட அடையாள அட்டை இல்லாமல் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் மராட்டா கோபுரம், கேரளாந்தன் கோபுர பகுதிகளிலும் தலா 2 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில் வளாகத்திலும், கோவிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாகசாலை பந்தலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழுவினர் தஞ்சை பெரிய கோவிலில் நேற்று சோதனை செய்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, கல்யாணசுந்தரம், ராஜ்குமார், ஏட்டுகள் திருவருட்செல்வன், ஜோதி, சத்தியமூர்த்தி, ரமே‌‌ஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கோவில் முழுவதும் சோதனை செய்தனர்.

மராட்டா விநாயகர் சன்னதி அருகே திருச்சுற்றுமாளிகையில் கோபுர கலசங்கள் தங்கமுலாம் பூசப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சென்று கோபுர கலசங்களை சோதனை செய்தனர். கோவில் வளாகத்தில் சிதிலமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஓரிரு இடங்களில் மணல் மூட்டைகள் கிடக்கின்றன. அந்த மணல் மூட்டைகளின் உள்ளே வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என இரும்பு கம்பிகளை கொண்டு குத்தி சோதனை செய்தனர்.

போலீஸ் துறையை சேர்ந்த சச்சின், ஜீசர் ஆகிய 2 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு கோவில் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. தஞ்சை பெரியகோவில் அருகே பெத்தண்ணன் கலையரங்கில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையிலும் மோப்பநாய்கள் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது.

பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், மடாதிபதிகள் வரக்கூடிய பாதைகளிலும் போலீசார் சோதனை செய்தனர். மேலும் சிவகங்கை பூங்கா, ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையங்களிலும், வாகன நிறுத்தும் இடங்களிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இன்று(அதாவது நேற்று) முதல் பெரிய கோவில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கும்பாபிஷேகம் முடியும் வரை தினமும் மோப்பநாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்படும். 5-ந் தேதி பெரியகோவிலுக்குள் அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றனர்.

இந்த நிலையில் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி.(சட்டம்-ஒழுங்கு) ஜெயந்த் முரளி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் செல்லக்கூடிய பாதை, யாகசாலை, கலசநீர் கொண்டு செல்லக்கூடிய பாதை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெரியகோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி ஆலோசனை நடத்தினார். 

Next Story