திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
x
தினத்தந்தி 28 Jan 2020 11:45 PM GMT (Updated: 28 Jan 2020 7:55 PM GMT)

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் புதுமண தம்பதிகள் கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் 2018-ம் ஆண்டு பிரபல ரவுடி பினு, 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் புடைசூழ பட்டாக்கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து பினு உள்பட அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

அதன்பிறகு ரவுடி பினு ஸ்டைலில் நடுரோட்டில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் கலாசாரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதிகள், பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர், மணமக்களிடம் பட்டாக்கத்தியை கொடுத்து கேக் வெட்ட வற்புறுத்துகிறார்கள். பட்டாக்கத்தியை கையில் வாங்கும் புதுமண தம்பதி, அதை கொண்டு கேக் வெட்டுகின்றனர். பின்னர் மணமகன், பட்டாக்கத்தியை உயர்த்தி காட்டுகிறார்.

அப்போது கூட்டத்தில் நிற்கும் வாலிபர் ஒருவர், மற்றொரு பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு சுழற்றுகிறார். அவர்களை சுற்றி நிற்கும் வாலிபர்கள், ‘பச்சையப்பாசுக்கு ஜே’ என்று கோஷமிடுகிறார்கள். இறுதியாக ஒருவர், “பட்டாக் கத்தியிலா கேக் வெட்டுறீங்க. உங்களுக்கு குண்டாஸ்தான்” என்ற குரலும் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் எந்த பகுதியில் நடந்தது? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அதில், திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது தெரிந்தது. பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், திருவேற்காடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணங்கள் குறித்து அனைத்து மண்டபங்களிலும் ஆய்வு செய்தனர்.

அதில், திருவேற்காடு அடுத்த சின்னகோலடியைச் சேர்ந்த புவனேஷ்-நந்தினி ஆகியோர்தான் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது தெரிந்தது. புதுமண தம்பதிகள் மற்றும் வீடியோவில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் திருவேற்காடு அடுத்த சின்னகோலடியைச் சேர்ந்த புவனேஷ், பச்சையப்பன் கல்லூரியில் 2017-ம் ஆண்டு பி.ஏ. படித்து முடித்து உள்ளார். அவர், நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் 26-ந் தேதி நடந்த இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருவேற்காடு, பூந்தமல்லி, எம்.எம்.டி.ஏ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் தற்போதை மாணவர்கள், ரூட்டு தல மாணவர்கள் கும்பலாக கலந்துகொண்டு கேக்கை வாங்கி வந்து பட்டாக்கத்தியால் மணமக்களை வெட்ட கூறியது விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து மணமகன் புவனேஷ் மற்றும் விக்கி, நிஷாந்த், மணி, கண்ணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அனைவரும் அவர்களுடைய பெற்றோருடன் அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதுபற்றி விசாரணை நடத்திய அவர், மணமகன் புவனேஷ் உள்பட அவரது நண்பர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அனைவரிடமும், இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளமாட்டோம் என உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பிவைத்தார்.

மற்றொரு பட்டாக்கத்தியை சுழற்றியது பச்சையப்பன் கல்லூரி மாணவன் மோகன்குமார் என்பதும், ஏற்கனவே ரூட்டு தல பிரச்சினையில் சிக்கி உள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் உள்பட மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரவாயலில் நடுரோட்டில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர், அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story