சிவந்திபட்டி மலையில், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்


சிவந்திபட்டி மலையில், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்
x
தினத்தந்தி 29 Jan 2020 3:45 AM IST (Updated: 29 Jan 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

சிவந்திபட்டி மலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் நேற்று நடைபெற்றது.

நெல்லை, 

உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள், மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை காலத்தில் அவ்வப்போது தீ பற்றி எரிகிறது. இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவு பெய்துள்ளது.

இதனால் காடுகள், மலைகளில் புற்கள், புதர்கள் அதிகமாக வளர்ந்து மண்டிக்கிடக்கிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தி அணைப்பது எப்படி? என்று தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் நேற்று சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

நெல்லை அருகே உள்ள சிவந்திபட்டி மலைப்பகுதியில் இந்த பயிற்சி நடைபெற்றது. நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி மகாலிங்கமூர்த்தி தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி அதிகாரி சுரேஷ் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், வீரர்கள், கமாண்டோ பயிற்சி பெற்ற வீரர்கள், வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்களும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு மலையில் தீப்பற்றி பரவிக்கொண்டிருக்கும் போது முதலில் அதனை எப்படி திசை திருப்புவது, எதிர் தீ விடுவது, மரம், விலங்கினங்களை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மலையில் உள்ள புதர் பகுதியில் ஓரிடத்தில் தீப்பற்ற வைக்கப்பட்டு நேரடி செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.

Next Story